நிதி நிறுவனங்களுக்கு கடிவாளம்.. சித்தராமையா அதிரடி உத்தரவு.!
மாநிலத்தில் எங்கெல்லாம் முறையாக அனுமதி பெறாமலும், சட்டவிரோதமாகவும் செயல்படும் நிதி நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும் என்றும் இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக வைத்து ஏராளமான நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலும் இந்த நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய ஏழை மக்கள், விவசாயிகள்
பணத்தை திரும்ப செலுத்தாமல் இருந்தால், அவர்களுக்கு ஒரு சில நிதி நிறுவனங்களால் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது என தெரியவந்தது. இதனால் பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் தற்கொலை செய்துள்ள சம்பவமும் அரங்கேறியது. இதையடுத்து, நிதி நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் விதமாக புதிய அவசர சட்டத்தை கர்நாடக மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய அவசர சட்டத்துக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும் ஒப்புதல் அளித்ததையடுத்து, சிறிய நிதி நிறுவனங்களுக்கு எதிராக புதிய அவசர சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.
அப்போது மாநிலத்தில் எங்கெல்லாம் முறையாக அனுமதி பெறாமலும், சட்டவிரோதமாகவும் செயல்படும் நிதி நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும் என்றும் இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் குறிப்பாக நிதி நிறுவனங்கள் ரவுடிகளை வைத்து மிரட்டி பணத்தை வசூலிக்க கூடாது என்றும் மாலை 6 மணிக்கு மேல் யாரும் வீட்டுக்கு சென்று பணம் வசூலிக்க கூடாது என்றும் இதனை போலீசார் கண்காணிக்க வேண்டும். மக்கள் ஏதேனும் புகார் அளித்தால், அதன்பேரில் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பாக சிறிய நிதி நிறுவனங்களின் தொல்லைகளில் இருந்து மக்களை பாதுகாக்க மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் உடனடியாக உதவி மையத்தை தொடங்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
அதுபோல் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நிதி நிறுவனங்கள் பற்றி தெரியவந்தால் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் இதற்காக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.