பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்..ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்!
புதுச்சேரியில் அரசு பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்யும் அதே வேலையில் தனியார் பள்ளிகளையும் கல்வித்துறையானது அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் எனஅதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் :புதுகுப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலை பள்ளியில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆசிரியர்,பொதுமக்கள் உதவியுடன் மாணவர்கள் சாப்பிட்டு கை கழுவ அமைக்கப்பட்ட தொட்டி உரிய பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்த செய்தி பெற்றோர்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தவுடன் உடனடியாக சபாநாயகர் அவர்களும், கல்வித்துறை அமைச்சர் அவர்களும் நேரடியாக சென்று மாணவர்களுக்கு ஆறுதல் கூறி நடவடிக்கை எடுத்ததை வரவேற்கும் அதே வேளையில். சம்பவம் நடந்த பள்ளி மட்டுமல்லாது புதுச்சேரி மாநிலத்தில் பல பகுதிகளில் அரசு பள்ளிகளில் இதுபோன்ற நிலை காணப்படுகிறது. பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடங்கள் பிரிவின் கீழ் இந்த அரசு பள்ளி கட்டிடங்கள் வருகிறது. இதற்கான அலுவலகமும் கல்வித்துறை வளாகத்திலேயே அமைந்துள்ளது.
அரசு பள்ளிகளை பொருத்தவரையில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் பள்ளி கட்டடங்களில் பார்வையிட்டு தேவையான கட்டிடங்களை புனரமைக்க வேண்டும், தேவையில்லாத கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று தங்கள் துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். பணிகளின் முக்கியத்துவம் பொறுத்து கல்வித்துறையும் நிதிநிலை பொறுத்து பணிகளை செய்ய சிறப்பு கட்டிடப் பிரிவுக்கு சிபாரிசு செய்வார்கள்.
ஆண்டு பராமரிப்பு பணி என்பதை சம்பந்தப்பட்ட சிறப்பு கட்டிட பிரிவானது மேற்கொள்ள வேண்டும் அதனை உரிய முறையில் செய்யாததால் இது போன்ற சம்பவங்கள் நடைபெற காரணமாக
அமைகிறது.
நடந்த சம்பவத்தை மனதில் கொண்டு உடனடியாக புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டிடங்களின் உறுதி தன்மையை உடனடியாக ஆய்வு செய்ய வல்லுனர் குழு ஒன்றை கல்விதுறை அமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தக் குழுவில் பொதுப்பணித்துறை, கல்வித்துறை, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள், கல்வி ஆர்வலர்கள் சேர்ந்த குழுவைக் கொண்டு பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
அரசு பள்ளிகளின் கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்யும் அதே வேலையில் தனியார் பள்ளிகளையும் கல்வித்துறையானது அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.
தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வுகள் துவங்கிவிட்டதால் தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் இந்த பணிகளை அவசிய பணிகளாக மேற்கொள்ள வேண்டும் என புதுச்சேரி கல்வித்துறையை கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.