அ.தி.மு.க.வுடன் கைகோர்த்த த.வெ.க…சிவகங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Loading

சிவகங்கை:

சிவகங்கையில் கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் அ.தி.மு.க.வுடன், த.வெ.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்களில் கனிம வளங்களை வெட்டி எடுப்பதில் விதிமீறல்கள் நடப்பதாகப் புகாா் எழுந்தது. இதேபோலஅந்த பகுதியில் இயங்கிவரும் குவாரியால் கிராமத்திற்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி மேற்கண்ட கிராமத்தினர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனற்ற நிலையில், போலீஸ் நிலையம், கோர்ட்டு மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கினர். இந்தநிலையில் கிராம மக்கள் சாா்பில் சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.அப்போது இந்த போராட்டத்துக்கு வேம்பங்குடி கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.

அப்போது இந்த போராட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில் நாதன் உள்ளிட்டோரும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெற்கு மாவட்ட செயலர் முத்துபாரதி தலைமையில் நகரச் செயலர் தாமரைப்பாண்டி, ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அப்போது தி.மு.க. அரசுக்கு எதிராகவும், கிராவல் மண் கொள்ளைக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.அதேபோல் உண்ணாவி ரதப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் மணல் கொள்ளைக்கு எதிராக பேசினர். அ.தி.மு.க.வுடன் த.வெ.க.வும் கைகோர்த்து போராட்டத்தில் பங்கேற்றது சிவகங்கை அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் எந்ததெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி சேரப்போகிறது, களம் மாறலாம், சூழ்நிலையும் மாறலாம் என்ற கருத்துகள் நிலவி வரும் நிலையில், அ.தி.மு.க.வுடன் த.வெ.க. ஒன்றாக போராட்டத்தில் கலந்துகொண்டதை இருகட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்று உள்ளனர்.

0Shares