ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு..அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!

Loading

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் உப்பளம் தலைமை கழகத்தில் மாநில கழக நிர்வாகிகள், மாநில பிற அணி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என வாழ்ந்து மறைந்த மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாளை மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தல், ஏழை எளிய நடுத்தர மக்கள் நலனுக்காக தையல் இயந்திரம், கிரைண்டர், தட்டுவண்டி, தள்ளுவண்டி, இலவச வேட்டி சேலைகள், பள்ளி மாணவர்களுக்கு பேனா, நோட்டு புத்தகம் வழங்கி மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் கொசு தொல்லையால் மக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் புதுச்சேரி அரசை இக்குழு வன்மையாக கண்டிக்கின்றது. மாநிலம் முழுவதும் கொசுக்கடியால் வைரல் காய்ச்சல், மூட்டு வலி, உடல்வலி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளினால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகராட்சி, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவற்றின் மூலம் கொசு உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே அழிக்க கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பான் மற்றும் புகை அடிப்பது ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் உடனடியாக செய்ய அரசை இக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

மருத்துவ முதுநிலை படிப்பு சம்பந்தமாக சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் மாநில இடஒதுக்கீடு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித மாநில இடஒதுக்கீடு அடுத்த கல்வியாண்டில் இருந்து வழங்கப்பட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இயங்கும் மத்திய பல்கலைக்கழகத்தில் நீண்ட நாட்களாக துணை வேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் அந்த பல்கலைக்கழத்தில் அவ்வப்போது நடைபெறும் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. சிறப்பு வாய்ந்த இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாதது. பதிவாளர் பணியிடம் நிரப்பாதது, துணை வேந்தர் பணியிடம் நிரப்பாததால் பல்கலைக்கழத்தின் தரம் குறைந்து வருகிறது.

புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு அறிவித்த ஒரு சில திட்டங்களை செயல்படுத்தினாலும் ஒரு சில திட்ட அறிவிப்புகள் செயல்வடிவம் பெறாமல் உள்ளதை இக்குழு அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என சட்டமன்றத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த அறிவிப்பு இன்னும் செயல்வடிவம் பெறவில்லை.

அரசின் இலவச அரிசி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் அரசு பாகுபாடுடன் செயல்படுவதை இக்குழு வன்மையாக கண்டிக்கின்றது. இலவச அரிசி வழங்கப்படும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் நடைபெறும் விடியா மக்கள் விரோத திமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாதது, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருட்கள் தடையின்றி விற்பனை, பாலியல் வன்முறைகள், சிறுமிகள் உள்ளிட்ட பெண்களுக்கு பாதுகாப்பின்மை ஆகியவற்றால் மக்கள் பயம் கலந்த பீதியுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு பொய்களை எடுத்துக்கூறி ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக கூட்டணிக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் என்னும் நிலைக்கு தமிழகத்தில் தள்ளப்பட்டுள்ளனர் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0Shares