எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Loading

அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டதாக கூறி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.அந்த வகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பும் பணிகள் தொடங்கியதாகவும், முதல்கட்டமாக நேற்று முன்தினம் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 205 இந்தியர்களுடன் ‘சி-17’ ரக ராணுவ விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் இந்தியர்களுடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் ‘சி-17’ ரக விமானம் நேற்று பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனால் விமான நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து விமானத்தில் வந்த இந்தியர்களை பஞ்சாப் மாநில அதிகாரிகள் வரவேற்றனர்.இதனை தொடர்ந்து மேலும் 205 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அமிர்தசரஸ் வந்தடைந்த அமெரிக்க ராணுவ விமானத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 104 இந்தியர்கள் வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கு போடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாக கூறப்படும் இந்தியர்களை நாடு கடத்துவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற மக்களவையில் இன்று கோரிக்கை விடுத்தனர். மேலும் அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது மாநிலங்களவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

0Shares