ரூ.6 லட்சம் குட்கா-புகையிலை பறிமுதல்…சென்னைக்கு கடத்திவரும்போது சிக்கியது.!
திருவள்ளூர்:
திருவள்ளூர் – திருத்தணி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரியில் கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலையை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிகிருஷ்ணன் மற்றும் போலீசார் திருவள்ளூர் – திருத்தணி நெடுஞ்சாலையில் பட்டரைபெரும்புதுார் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று இரவு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி கொண்டு வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து லாரியில் இருந்த பெங்களூரை சேர்ந்த அப்ரர் அகம்மது, லாரி டிரைவரான சென்னை கொளத்துார் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அப்போது சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலையை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதேபோல் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் மப்பேடு பஜார் பகுதியில் குட்கா பதுக்கி விற்ற பாஸ்கர் என்பவரை கைது செய்தனர்.