மத மோதலை தூண்டியதாக புகார்…எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
மதுரை:
பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா, இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது சுப்பிரமணியபுரம் காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். இதையடுத்து சட்டம், ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.இந்தநிலையில் , இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஸ், மாநில செயலாளர் சேவுகன், புதுச்சேரி மாநில தலைவர் குமார், ஆர்.எஸ்.எஸ். தென் பாரத அமைப்பாளர் வன்னியராஜன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா, இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது சுப்பிரமணியபுரம் காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.