ஈரான் நாடே இருக்காது… டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
ஈரான் என்ற நாடே இருக்காது அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்றும் எதுவும் மிச்சமிருக்காது என டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
ஈரான் நாட்டின் குத்சு படையின் தலைவராக இருந்தவர் காசிம் சுலைமானி. இவர், கடந்த 2020-ம் ஆண்டில் ஆளில்லா விமானம் கொண்டு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் மற்றும் முன்னாள் வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்டோருக்கு ஈரானில் இருந்து கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. இதன் விளைவாக டிரம்புக்கு எதிராக தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன. இந்த ஈரானின் சதி முறியடிக்கப்பட்டதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதித்துறை அறிவித்தது.
இந்நிலையில் ஈரான் மீது அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் உத்தரவுகளில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ஈரான் தன்னைக் கொன்றால் அதை ‘அழிக்க’ வேண்டும் என்று ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக கூறினார். ஈரான் என்ற நாடே இருக்காது அவர்கள் அழிக்கப்படுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது என கடும் எச்சரிக்கை விடுத்தார்.