மக்கள் நலப் பேரவையின் கிறிஸ்துமஸ் வாழ்த்தும் – வரலாறும்
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், உலகெங்கிலும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகையை குறித்து வெளியிட்டுள்ள, கிறிஸ்மஸ் தினம் வாழ்த்தும் – வரலாறும் என்கிற வாழ்த்துச் செய்தியில்….
“கருணையின் வடிவமான இயேசு கிறிஸ்து அவதரித்த நாள் கிறிஸ்துமஸ் திருநாளாக உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன்,
இந்நன்னாளில் இயேசு கிறிஸ்து குறித்து பகிர்வதில் மகிழ்கின்றேன்.
காபிரியேல் என்னும் இறைத்தூதன் நாசரேத்து நகரில் உள்ள தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த கன்னி மரியாவிடம் நற்செய்தியை கூறும்படி கடவுளினால் அனுப்பப்பட்டார். தேவதூதன் அவளிடத்தில் வந்து “கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார் ஸ்திரிகளுக்குள்ளே நீ ஆசிர்வதிக்கப்பட்டவள்” என்றான். இவ்வார்த்தைகளைக் கேட்டு அச்சமுற்றுக் கலங்கிய மரியாள் இந்த வாழ்த்துகள் எப்படிப்பட்டதென்று தனக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருந்தாள். மரியாவை பார்த்து, தேவதூதன் “மரியாளே, பயப்படாதே; மேலும், பரிசுத்த ஆவியானது உன் மேல் வரும், உன்னதமானவருடைய வல்லமை உன்மேல் நிழலிடும்; நீ உன் வயிற்றில் கருவுற்று, தேவனுடைய குமாரனை பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக, அவர் பெரியவராயிருப்பார், அவர் உன்னதமானவருடைய குமாரன் என்று அழைக்கப்படுவார். அவர் என்றென்றைக்கும் அரசாளுவார், அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது” என்றான்
அப்பொழுது மரியாள் தேவதூதனை நோக்கி, “நான் ஒரு கன்னிப் பெண், என் கணவனை நான் அறியேனே? இதெப்படி நடக்கும்? என்று கேட்டார். அதற்கு தேவதூதன் கடவுளால் எதுவும் சாத்தியம் என்றார். அதற்கு மரியாள், நான் ஆண்டவரின் அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக் கடவது என்றார். இந்த நற்செய்தியை கூறிவிட்டு தேவதூதன் அங்கிருந்து சென்றார்.
கடும்பனியும் – கடுங்குளிரும் நிறைந்த ஓர் இரவு வானில் மிகப் பிரகாசமான விண்மீன் தோன்றிய காரணத்தை இவ்வுலகம் அறிந்திருக்கவில்லை, காரணம் கன்னி மரியாள் வயிற்றில் பரிசுத்த ஆவியின் மூலமாக கருவுற்று, (பிரசிவிக்க சத்திரத்தில் இடம் இல்லாததால்) இந்த உலகின் ராஜாதி ராஜாவான இயேசுபிரான் மாட்டு தொழுவத்தில் பிறந்துள்ளாரென்று அறிந்திருக்கவில்லை.
அந்த இரவு வேளையில் தங்களின் மந்தையை காத்து கொண்டிருந்த மேய்ப்பர்களிடம் (ஆயர்கள்) இறைத்தூதன் தோன்றி (முதன் முதலில்) பெத்லகேமில் மீட்பர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். மேலும் பரலோகத்தில் உள்ள இறைத்தூதர்கள் அனைவரும். “உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக, இப் பூமியில் நன்மனதோருக்கு அமைதியுமாகுக” என பாடினர். இடையர்கள் (ஆடு மேய்ப்பர்கள்) நகருக்குள் சென்று மட்டுதொழுவத்திலுள்ள குழந்தை இயேசுவை கண்டு, கையிலிருந்த (பரிசுகளை) பொற்காசுகளை செலுத்தி வணங்கி மகிழ்ந்தனர்.
சிறுவயதிலேயே இயேசு கிறிஸ்து ஞானமிகுந்தவராகக் காணப்பட்டார். அவர் தம் பெற்றோருக்குப் பணிந்திருந்தார். யூத மத சட்டங்களைக் குறித்தும், இறையாட்சியைக் குறித்தும் தெளிவு பெற்றிருந்தார். தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் எருசலேம் தேவாலயத்தில் தன்னைவிட பல மடங்கு வயதில் மூத்த ஆன்மீகவாதிகளுடன் இறையாட்சி குறித்த விவாதத்தில் ஈடுபடுமளவுக்கு அவருக்கு மறை நூல்கள் குறித்தும் (மிகுந்த ஞானமும்) சமுதாயம் குறித்தும் போதிய விழிப்புணர்வு இருந்தது.
இயேசு கிறிஸ்து தன்னுடைய முப்பதாவது வயதில் யூத முறைப்படி யோவானிடம் யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்று பணி செய்யத் துவங்கிய இயேசு கிறிஸ்து, மூன்று ஆண்டுகள் இடையறாது பணி செய்தார். தன்னுடைய பணியை முழுக்க முழுக்க மனித நேயம் சார்ந்த பணியாக அமைத்துக் கொண்டவர். இறைத்தன்மையுடன் விளங்கிய அவர் தன்னை “கடவுளின் மகன்” என தன்னுடைய போதனைகளில் வெளிப்படையாகவே அறிவித்தார்.
மேலும் அவர் பன்னிரண்டு பேரை தன்னுடைய சீடர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாழ்வியல் போதனைகளையும், பல ஆற்றல்களையும் வழங்கி தன்னுடைய போதனைகளை எல்லா இடங்களுக்கும் அறிவிக்க அவர்களைத் தயாராக்கினார். ஏழைகளுக்கு உதவுதலே இறைபணி என்பதை தன்னுடைய போதனைகளின் அடிப்படையாக்கிக் கொண்டு அன்பு என்பதே ஆன்மீகமென போதித்தார். எருசலேம் தேவாலயத்தில் பலிப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை கண்டு கடிந்து, அவர்களை தன் சாட்டையால் அடித்துத் துரத்தி புரட்சி செய்தார்.
“காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனமாறி நற்செய்தியை நம்புங்களென்று போதித்தார். தன்னுடைய போதனைகளை சுருக்கி, கடவுளிடம் முழு மனதோடு அன்பு செய்வதும், தன்னை நேசிப்பது போல அடுத்தவரை நேசிப்பதையும் பிரதானமாக தமது இரண்டு முக்கிய போதனைகளாக்கிக் கொண்டார்.
மேலும் அவர் “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், நல்ல ஆயன் நானே, என் ஆடுகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன், வழியும் உண்மையும் வாழ்வும் நானே, என் வழியாயன்றி எவரும் தந்தையிடம் (கடவுளிடம்) வருவதில்லை, உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள், பிறர் உங்களுக்குச் செய்யவேண்டுமென விரும்புகிறவற்றை (நன்மைகளை) எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள், மேலும் அவர் போதனைகளில் மரம் நல்லதென்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டதென்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்.உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என ஏராளமான நற்போதனைகளை போதித்தார்.
மேலும் அவர் குருடர்களை பார்க்க செய்தார், செவிடர்களை கேட்க செய்தார், மிக கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தினார், இறந்தோரை உயிர்த்தெழச் செய்தல் என ஏராளமான பல அற்புதங்களை செய்து, பாவ செயல்களிலிருந்து விடுவித்து மக்களை நல்வழிபடுத்தினார். இவரது நற்போதனைகளையும், அற்புதங்களையும் கண்டும், கேள்விபட்டும் மற்றும் இவரின் நன்னடத்தையினாலும் ஈர்க்கப்பட்டு மக்கள் பெருந்திரளாக அவரை வழிபட்டு பின்தொடர தொடங்கினார்கள்.
ஆனால் யூத இனத் தலைவர்கள் பலர் இயேசு சொல்லும் போதனைகளை ஏற்க முன்வரவில்லை. மாறாக, அவரை எப்படியாவது ஒழிக்க வேண்டுமென முடிவு செய்திருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் இயேசுவின் 12 திருத்தூதர்களுள் ஒருவரான யூதாஸ் காரியோத்து, யூத மதத் தலைவர்களின் சூழ்ச்சிப் பிடியில் சிக்கி, மனம் மாறி காசுக்காக ஆசைப்பட்டு இயேசுவை வெறும் 30 வெள்ளிக் காசுகளுக்குக் காட்டிக் கொடுக்க முன்வருகின்றான். ஒருநாள் பின்னிரவில் ஒலிவ மலையென்றழைக்கப்படும் கெத்சமனித் தோட்டத்தில் இறைவேண்டல் செய்து கொண்டிருக்கும்போது, யூதாஸ் யூத மத காவல் தலைவர்களுடன் அங்கு வந்து இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறார்.
அப்போது ரோம பேரரசின் கீழ் ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்தின் முன்னால் இயேசுவைக் கொண்டு சென்றார்கள். பிலாத்து, இயேசு குற்றமற்றவர் எனக் கண்டு, இயேசுவை நோக்கி பார்த்து அவரை விடுவிக்க எண்ணி இவர்கள் சொல்கிறபடி நீர் கடவுளின் குமாரனா என கேட்டதும் ஆம் நீர் சொல்கிறபடி தான் என்றார். பிலாத்து ராஜா இயேசுவை விடுவிக்க முயன்றாலும் யூதர்களுக்கும், அரசுக்கும் பயந்து இயேசுவைச் சிலுவையில் அறையக் கட்டளையிட்டார்.
இத்தருணத்திற்காக அங்கு காத்திருந்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் தலையில் முட்களால் செய்யப்பட்ட கிரீடத்தை அணிவித்து, சிலுவையை அவரின் தோளில் சுமக்க செய்து, அவரை சவுக்காலடித்து துன்புறுத்தி, வீதிகளின் வழியே அழைத்துச் சென்றார்கள். மேலும் இரு கள்வர்களின் தோள்களில் சிலுவையை சுமக்க செய்து, அவர்களையும் அவருடன் அழைத்துச் சென்றார்கள். பிறகு இயேசு கிறிஸ்துவின் இரண்டு கரங்கள் மற்றும் கால்களில் ஆணிகள் கொண்டு அறைந்தார்கள். இதனால் அவரின் கை மற்றும் கால்களிருந்து இரத்தம் வழிந்தோடியது. இத்தகைய கொடுமைகளால் தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் வலி வேதனைகளை இயேசு பொறுத்துக் கொண்டு, தனக்கு கொடுமை செய்தவர்களுக்காக மட்டுமல்லாது இவ்வுலகில் வாழும் அனைத்து பாவிகளுக்காகவும் மனமுருகி “அப்பா, இவர்களை மன்னியுங்கள்; தாங்கள் செய்வது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாது” என்று இவ்வுலக மக்களுக்காக தம் இரத்தத்தை சிந்தி கடவுளிடம் பாவமன்னிப்பு கோரி பிராத்தனை செய்து உயிர் நீத்தார். பிறகு கல்லறையில் அடைக்கப்பட்ட இயேசு, மூன்று நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்தார்.
இத்தகைய பரிசுத்த ஆவியான தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை தான் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் நட்சத்திரங்கள் ஒளிரவிட்டு, குடில்கள் அமைத்து உள்ளத்தில் மகிழ்ச்சி குடிகொள்ள, புத்தாடைகள் அணிந்து, பரிசுகளை வழங்கி, வாழ்த்துக்களை பரிமாறி, இறைத்துதி பாடல்களைப் பாடி மகிழ்ந்து, மதம் பாராமல் மனங்கள் கூடி விருந்துண்டு உலகெங்கும் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் மலர்ந்திட பிரார்த்தித்து, இரவில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தி கொண்டாடும் திருநாளாம் கிறிஸ்துமஸ் பெருநாள்” என்று மக்கள் நலப் பேரவையின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தன்னுடைய கிறிஸ்துமஸ் வரலாறு குறித்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.