ஃபெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தீபாவளி திருநாள் வாழ்த்து

Loading

ஃபெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு தீப ஒளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்..

தீபாவளி பண்டிகை உலகம் முழுவதிலுமுள்ள இந்து, சீக்கிய, ஜைன, மற்றும் பௌத்த மதத்தினரால் கொண்டாடப்படுகின்றது. இந்த தீப ஒளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவித்து. அவரவர் இல்லங்களில் தீப விளக்கேற்றி, இல்லங்களையும், உள்ளங்களையும் ஒளிமயமாக்கி மகிழ்ந்திடும் திருநாள் தான் இந்த தீபாவளி திருநாள்.

இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதன் முக்கிய சாராம்சம், தீயவர்களை கடவுள் நிச்சயம் அழிப்பார் என்பதாகும். மேலும் பண்டிகைகள் கொண்டாடப்படுவதின் முக்கிய நோக்கம், மக்கள்  அனைவரும் தங்களின் கவலைகளை மறந்து, உற்றார், உறவுகள் மற்றும் நண்பர்களுடன் ஒன்று கூடி மகிழ்ச்சியாக இருப்பதற்காக தான்.

இந்துப் புராணங்களில் இந்துக்கள் இத் தீபாவளி பண்டிகையை  கொண்டாடவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக தேவர்களையும் மற்றும் மக்களையும் கொடுமைப்படுத்தி வந்த நரகாசுரன் என்கின்ற அசுரனை பகவான் மகாவிஷ்ணு அழிப்பதற்காக ஸ்ரீகிருஷ்ணர் அவதாரம் எடுத்து நரகாசுரன் என்ற அசுரனை வதம் செய்தார் என்றும். நரகாசுரன் இறக்கும் தருவாயில் அவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்ட வரத்தின் படி, அவன் (நரகாசுரன்) இறந்த நாளை மக்கள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.

மேலும், ராமாயணத்தில் இராமன், இராவணனை அழித்து தனது வன வாசத்தை முடித்து கொண்டு சீதா தேவி மற்றும் தம்பி இலக்குமணனுடன் அயோத்தி நகருக்கு திரும்பினார். அவர்கள் திரும்பிய திருநாளை அயோத்தி மக்கள் அவர்களை வரவேற்க்கும் விதமாக, அகல் விளக்குகளை ஏற்றிவைத்து வரவேற்றுள்ளனர். இதனால் தீபாவளியை தீப ஒளி என்றும் கூறுகின்றனர்.

மேலும், மகாபாரதத்தில் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் வனவாசம் சென்றவர்கள், அதன் பின் நடைபெற்ற யுத்தத்தில் வெற்றி பெற்று நாடு திரும்பிய போது மக்கள் அவர்களை வரவேற்கும் விதமாக தீபம் ஏற்றி கொண்டாடியதாகவும் கூறப்படுன்கிறது. மேலும், செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவி தங்களது இல்லத்திற்கு வரும் நாள் என்று கருதியும் தீபாவளி கொண்டாடப்படுகின்றது.

ஜைன மதத்தினர் மகாவீரர் முக்தி அடைந்த நாளை தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகின்றனர். மாமன்னர் அசோகர் புத்த மதத்தை தழுவிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது..

சீக்கியர்கள் தீபாவளி பண்டிகையை ‘பண்தி சோர் திவாஸ்’ என்கின்ற பெயரில் கொண்டாடுகின்றனர். மேலும் இதே நாளில் தான் சீக்கியர்களின் புனித தளமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதை கொண்டாடும் விதமாகவும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இத்தகைய சிறப்புகளை கொண்ட தீபாவளி திருநாளாம் இந்நன்னாளில், நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் அகலட்டும், மகிழ்ச்சி பெருகட்டும்,, இருளை அகற்றும் தீப ஒளியைப் போல, நல்லெண்ணங்கள் ஒளிரட்டும், இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீப ஒளி திருநாளை செல்வம் இருப்பவர்கள், இல்லாதோருக்கு வழங்கி, மகிழ்வுடனும் மற்றும் பாதுகாப்புடனும் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடுவோம்.

நல் உறவுகளையும், நட்புக்களையும் வளர்ப்போம். அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் என பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தெரிவித்துள்ள தீபாவளி திருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

0Shares