பல்லாவரம் கன்டோன்மென்ட் வாரியத்தின் விளையாட்டு மைதானத்தை மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் திறந்து வைத்தார்

Loading

சென்னை பரங்கிமலை, பல்லாவரம் கன்டோன்மென்ட் வாரியத்தின் விளையாட்டு மைதானத்தை மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் திறந்து வைத்தார்

 PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், இன்று சென்னை பரங்கிமலை மற்றும் பல்லாவரம் கண்டோன்மெண்ட் வாரியத்தின் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். பரங்கிமலை, வடக்கு பரேட் சாலையில் 1.25 ஏக்கர் பரப்பளவில் ரூ.2.8 கோடி மதிப்பில் இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில் 1 ஹாக்கி மைதானம், 2 சிறிய கால்பந்து மைதானங்கள், 1 கிரிக்கெட் வலைப்பயிற்சி மைதானம், 2 வாலிபால் மைதானங்கள், 1 கூடைப்பந்து மைதானம் ஆகியவை அமைந்துள்ளன. மைதானம் முழுவதும்  சர்வதேச தரத்திலான செயற்கை புல்தரை மற்றும் டர்ஃப் அமைக்கப்பட்டுள்ளது.

     

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாட்டில் விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் கேலோ இந்தியா திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் சர்வதேச தரத்திலான விளையாட்டுப் பயிற்சிகளைப் பெற்று ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகள் புரிந்து பதக்கங்களை வென்று வருகின்றனர் என்றும் கூறினார்.

     

தூய்மையே சேவை இயக்கம்:

இதன் தொடர்ச்சியாக சென்னை பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ள பரங்கிமலை மற்றும் பல்லாவரம் கண்டோன்மென்ட் வாரியத்தின் அறிஞர் அண்ணா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தூய்மை இந்தியா இயக்கத்தின் தூய்மையே சேவை நிகழ்ச்சிகளின் நிறைவு விழாவில் அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், மகாத்மா காந்தி கனவு கண்ட தூய்மையான இந்தியாவை உருவாக்க, 2014 -ல் பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா இயக்கத்தைத் தொடங்கிவைத்தார். இது கடந்த 10 ஆண்டுகளில்  மக்கள் இயக்கமாக மாறி மகாத்மாவின் கனவை நனவாக்கியுள்ளது என்றார். நாட்டில் 12 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டு அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பொது வளாகங்கள் அனைத்தும் கழிப்பறை வசதிகளைப் பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.

     

     

2047-ல் நாடு வளர்ச்சியடைந்த பாரதமாக, ஒரு வல்லரசாக மாறும்போது பொருளாதாரத்தில் மட்டுமின்றி  அனைத்து துறைகளிலும் தலைசிறந்து விளங்கும் என்றார். அந்த வகையில் நாட்டில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்தத் தூய்மை இந்தியா இயக்கம் மகத்தான பணியினை செய்துள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களின் மகத்தான சேவையைப் பாராட்டி அவர்களை கௌரவித்தார். கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற தூய்மையே சேவை இயக்கத்தின் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், தூய்மையின் முக்கியத்துவத்தை விளக்கும் விழிப்புணர்வு நாடகம் ஆகியவையும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

மகாத்மா காந்திக்கு அஞ்சலி:

முன்னதாக இன்று காலை அமைச்சர் எல் முருகன் கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களுடன் சென்று மலரஞ்சலி செலுத்தினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் திரு காமராஜர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.

     

     

காதி கிராமோத்யோக் பவன்:

அமைச்சர் எல் முருகன் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள காதி கிராமோத்யோக் பவனுக்கு சென்று அங்குள்ள விற்பனையகத்தில் ஆய்வு செய்தார். அப்போது கதராடைகளை வாங்கிய அமைச்சர், யூ பி ஐ மூலம் பணம் செலுத்தினார்.

          

0Shares