பதிவுத்துறைக்கு பெயிரா கூட்டமைப்பு பாராட்டியும்- கோரிக்கை விடுத்தும் கடிதம்.
தமிழ்நாடு பதிவுத்துறைக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், பாராட்டியும் பொதுமக்களின் நலன் கருதி வேண்டுகோள் விடுத்தும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டு எழுதி உள்ள கடிதத்தில்,
பதிவுத்துறை சார்பதிவாளர்களுக்கு அறிவுரை.
தமிழ்நாடு பதிவுத் துறையின் சார்பில், கூடுதல் பதிவுத்துறை தலைவர் முத்திரை மற்றும் பதிவு அவர்கள் வெளியிட்டுள்ள பதிவுத்துறை சுற்றறிக்கை எண். 18751/சிஎஸ்1/2024. நாள்: 03.09.2024 இன் மூலம் அனைத்து சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், மற்றும் துணை பதிவுத்துறை தலைவர்கள் ஆகியோர்களுக்கு ஆவணப்பதிவு மேற்கொள்ள வருகை தரும் ஆவணதாரர்களிடம் வருவாய் துறை சார்ந்த ஆவணங்களுக்கு அத்தாட்சி செய்து வழங்கிட கோருவது சம்பந்தமாக அறிவுரை வழங்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு அனுப்பியுள்ளது.
பட்டா, சிட்டா, அ-பதிவேடு, நில வரைபடம், TSLR, நத்தம் மனைகள்
குறிப்பாக இந்த அறிவுறுத்தல் சுற்றறிக்கையில் சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும்போது, ஆவணதாரர்களிடம் வருவாய்த்துறையின் காகித ஆவணங்களை குறிப்பாக பட்டா, சிட்டா, அ-பதிவேடு, நில வரைபடம், TSLR, நத்தம் மனைகள் ஆகியவற்றின் காகித பிரதிகளை கேட்க வேண்டாம்’ எனவும்,
பதிவுத்துறை – தமிழ் நிலம் இணையதளங்கள் இணைப்பு.
இது குறித்த தகவல்களை பதிவுத்துறையுடன் இணைக்கப்பட்டுள்ள “தமிழ் நிலம்” இணையதளம் மூலம் சரிபார்த்து கொள்ள சார் பதிவாளர்களுக்கு பதிவுத் துறை அறிவுறுத்தி மேற்கண்ட சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளபடியே இந்த சுற்றறிக்கை பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளது. இதனை எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மனம் திறந்து பாராட்டி வரவேற்கிறது.
சார்பதிவாளர்கள் வலியுறுத்தல்.
அதே போன்று மாநிலம் முழுவதும் உள்ள பதிவு அலுவலகங்களில் ஆவணப்பதிவு மேற்கொள்ள வருகை தரும் பொதுமக்களிடம் சார் பதிவாளர்கள் அந்த சொத்து சம்பந்தமான வில்லங்க சான்றிதழை காகித வடிவில் பதிவாளரின் பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டுமென வற்புறுத்தி வலியுறுத்துகின்றனர்.
புதிய சுற்றறிக்கை வெளியிட வேண்டும்.
இது குறித்து எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு பலமுறை பதிவுத்துறைக்கு கோரிக்கை விடுத்தும், கடிதம் எழுதியும் இது சம்பந்தமாக எந்தவிதமான தீர்வும், அறிவுறுத்தல் சுற்றறிக்கையும் பதிவு துறையின் சார்பில், இதுவரை வெளியிடாதது மிகுந்த வேதனை அளிக்கிறது.
பதிவுத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே பொதுமக்களுக்கு பெருமளவில் உதவக்கூடிய மகத்தான மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை, அறிவார்ந்து முன்னெடுத்து, ஆக்கபூர்வமாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு பதிவுத்துறை, இதனையும் தமது கூடுதல் கவனத்தில் கொண்டு,
தமிழ் நிலம் – பட்டா, சிட்டா, அடங்கல், புலப்படம், அ-பதிவேடு சம்பந்தமான இணையதளம்.
வருவாய் துறை பதிவேடுகளை “தமிழ் நிலம்” என்கிற இணையதளம் மூலம் சரிபார்த்து பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் சுற்றறிக்கை வெளியிட்டு, ஆக்கபூர்வமாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள பதிவுத்துறை,
பதிவுத்துறையின் இணையதளம்
தமிழ்நாடு பதிவு துறையின் இணையதளமான www. tnreginet.net என்கிற பதிவுத்துறைக்கு சொந்தமான இணையதள முகவரி வாயிலாகவே, பொதுமக்கள் பதிவுக்கு தாக்கல் செய்யும் ஆவணங்களின் வில்லங்க சான்றிதழ் குறித்த விவரங்களையும், சார் பதிவாளர்கள் சரிபார்த்து, ஆவண பதிவினை மேற்கொள்ளும் வகையில் வழிவகை செய்து சுற்றறிக்கை வெளியிட வேண்டுமென பொதுமக்களின் சார்பாக வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.