பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி மீலாதுன் நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Loading

பெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி மீலாதுன் நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, உலகம் முழுவதும் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மீலாதுன் நபி பண்டிகையை நினைவு கூர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இறைவனின் இறுதி தூதர் தங்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாள் இன்று உலகம் முழுதும் உள்ள இஸ்லாமியர்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்), கிபி 570 ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12ம் தேதி மெக்கா நகரில் தந்தை  அப்துல்லாஹ்  தாயார் ஆமினா அவர்களுக்கு மகனாக பிறந்தார்.
மேலும் நபிகள் நாயகம் தன் சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்து தம் சிறிய தந்தை அபூ தாலிப்பிடம் வளர்ந்து வந்தார்.
அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த அரபு மக்கள் பல கோத்திரங்களாக இருந்தனர். அவரவர்  கோத்திரத்திற்கு பல சிலை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். மூட நம்பிக்கைகளில் மூழ்கி கிடந்தனர். மேலும் மக்கள் சூது, குடி ,சமுக விரோத செயல்களில் ஈடுபட்டும் வந்தனர். பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று விடும் கொடுர பழக்கமும் அந்த காலகட்டத்தில் இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவைகளை கடுமையாக எதிர்த்தார். இளமைப் பருவத்திலேயே செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்ததால், நபிகள் நாயகத்தை அனைவரும் அல் அமீன் (நம்பிக்கையாளர்) என்றும், அஸ்ஸாதிக் (உண்மையாளர்) என்றும் போற்றினர். 14 ஆம் வயதில் நபி அவர்கள் ஒருமுறை அவர் சிறிய தந்தையுடன் சிரியா தேசத்திற்கு வணிகம் செய்ய  சென்றுள்ளார்.
தனது 25வது வயதில் தன்னை விட வயதில் மூத்தவரும் கைம் பெண்ணுமான கதீஜா அம்மையார் வயது (40) அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள்.
மெக்காவில் உள்ள ஹிரா எனும் மலைக் குகையில், நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் வருடத்தின் பெரும் நாட்களை பிரார்த்தனை செய்து கழிப்பது வழக்கமாக கொண்டவர்.
 610-ஆம் வருடம், இதேப்போல் நபிகள் நாயகம் (ஸல்) அம்மலைக்குச் சென்றபோது,  ஜிப்ரீல் (அலை)முதன் முதலில் தோன்றினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் 40வது வயதில் நபித்துவம் பெற்றார்கள்.நபிகள் நாயகம் (ஸல்)  இறைவனின் துாதராக அறிவிக்கப்பட்டதும், ”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! நான் அவனுடயை துாதனாக இருக்கிறேன்” என கூறினார். ஓரிறைக் கொள்கையின் மூலம் உலக மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டினார்.
அந் நகரை ஆள்பவர்கள் மற்றும் மற்ற குலத்தினரும்   நபிகள் நாயகம் (ஸல்)  அவர்களின் போதனைகளால் அதிக அளவில் மக்கள் ஈர்க்கப்படுவது அச்சுறுத்தலாக தெரிந்தது. மெக்காவின் முந்தைய மதத்தை நபிகள் நாயகம் (ஸல்) கண்டிப்பதை, அவரது குலமான குரைஷ்க்கு பிடிக்கவில்லை. காரணம், அவர்கள் தான் காபாவின் காப்பாளர்களாக இருந்து வந்தவர்கள் வணிகர்கள் மத்தியில் பெரும் பதவி மற்றும் திருமணம் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்து நிறுத்த சில செல்வந்தர்கள் முயன்றனர், எனினும் அவ்விரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) மறுத்தார்.
நபி நாயகம் அவர்களின் போதனை ஏற்று ஓரிறைக்  கொள்கையை கடைபிடிக்க தொடங்கிய அவர்கள் மீது மற்ற கோத்திரத்தவர்கள் கடும் தாக்குதல்களையும் அவர்களின் வீடுகளையும் செல்வங்களையும் சூறையாடினர். நபி (ஸல்) அவர்களையும் கொல்வதற்கு முயன்றனர். இதன் காரணமாக நபி நாயகம் (ஸல்) அவர்களும் அவரது நபி தோழர்களும் மதீனாவிற்கு பயணமானார்கள்.
முஹம்மது நபி நபித்துவம் வழங்கப்பட்டு பதினான்காம் வருடம் இறைவனின் உத்தரவுப்படி தன் உற்ற தோழர் அபூபக்கருடன் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) குடிபெயர்ந்து சென்றார். 
இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட  622ம் வருடம் இசுலாமிய நாட்காட்டியின் முதல் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது.
மதீனா நகரில் அனைத்து மக்களும் முகம்மது நபியை வரவேற்றனர். நபிகள் நாயகம் (ஸல்) தமது தங்குமிடத்திற்கு அருகில் தொழுகைக்கு கட்டியப் பள்ளிவாசல் அல்-மஸ்ஜித் அந்-நபவி (முகம்மது நபி கட்டிய பள்ளிவாசல்) என்று அழைக்கப்படுகிறது. மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுக்கும் மதீனா நகர அன்சாரிகளுக்கும் சகோதரத்துவ ஒப்பந்தம் ஏற்படுத்தினார்.
மேலும் மதீனா யூதர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.
மெக்காவின் குரைஷ் மற்றும் மதினா அன்சாரிகளுக்கும் இடையே பல யுத்தங்கள் பல காலகட்டத்தில் நடந்தன.
ரமலான் மாதம் 10-ஆம் தேதி, 8 வது ஹிஜ்ரி (கி.பி. 630), முகமது நபி தனது சஹாபாக்கள் (தோழர்கள்) 7,000 பேருடன் மதீனாவிலிருந்து மெக்காவிற்கு புறப்பட்டார். அப்பயணத்தின் போது, வேறு சில பழங்குடியினரும் அவர்களோடு இணைந்தனர். இந்தப் பெரிய குழுவின் வருகை பற்றிய தகவல் கிடைத்ததும், மெக்காவின் குரைஷ் சமூகம் அவர்களின் தலைவர் அபு சுஃப்யான் ஹஸ்ரத், முகமது நபியிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
முகமது நபி 20-ஆம் ரமலான் அன்று (கி.பி. 630 ஜனவரி 11) காபாவை அடைந்தார். இங்கு அவர் மெக்கா நகர  மக்களிடம் ஆற்றிய உரையில், “நீங்கள் அனைவரும் சுதந்திரமானவர்கள். இன்று உங்களிடம் எந்தக் கேள்வியும் இல்லை. அல்லாவும் உங்களை மன்னிப்பானாக. அவர் மிகவும் இரக்கமுள்ளவர், என்றார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போதனைகளில் சில
உன் தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது.
உனது தந்தையின் அன்பை நீ பாதுகாத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது  ஒளியை போக்கி விடுவான்.
வட்டி வாங்கவும் கூடாது வட்டிக்கு கொடுக்கும் கூடாது
இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான். 
தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லொழுக்க பயிற்சியும் ஆகும். 
உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு.
களவு, மது,சூது ஆகியவைகளை தவிர் மற்றும் பொய்,புறம் பேசாதே. 
ஏழைகளிடமும் அனாதைகளிடமும் இரக்கம் காட்டு
தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறை நம்பிக்கையாளராய் இருக்க முடியாது.
பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.
மெக்காவில் இருந்து மதீனா வந்த பின்னர் பத்து வருடங்கள் கழித்து முகம்மது நபி தமது இறுதி ஹஜ் கடமையை மக்காவிற்கு சென்று நிறைவேற்றிய பின்னர் மதீனா திரும்பினார். அதில் தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனையை பின்பற்றி உலகில் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாக பிரார்த்தித்து, இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பெயிரா கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் ஆ.ஹென்றி அவர்கள் மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
0Shares