தமிழக ஆளுநருடன் அசாம் ஊடகக் குழு சந்திப்பு

Loading

தமிழக ஆளுநருடன் அசாம் ஊடகக் குழு சந்திப்பு: கலாச்சார உறவுகள், ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கை

 PIB Chennai

தமிழ்நாட்டில் ஆறு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஊடகக் குழுவினர் கலாச்சாரம், தொழில்முறை தோழமையின் அடையாளமாக, தமிழக ஆளுநர் திரு ஆர்.என். ரவியை இன்று சந்தித்தனர். வளர்ந்து வரும் ஊடக நிலப்பரப்பு, இரு மாநிலங்களிலும் சமூகப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் இதழியலின் முக்கியப் பங்கு குறித்த ஆற்றல் மிக்க உரையாடலுக்கான ஒரு தளமாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

ஊடகக் குழுவினரை அன்புடன் வரவேற்ற ஆளுநர் ரவி, அசாம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நிலவும் ஊடகச் சூழல்கள் எதிர்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள் ஆகியவை குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். பொது விழிப்புணர்வை ஊக்குவிப்பதிலும், கலாச்சார இடைவெளிகளை இணைப்பதிலும் பிராந்திய ஊடகங்களின் முக்கியத்துவத்தை ஆளுநர் வலியுறுத்தினார்.

அசாமின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக, தூதுக்குழு ஆளுநருக்கு பித்தளை விளக்கு, வேலைப்பாடுகள் நிறைந்த தொப்பி, பாரம்பரிய அசாமிய மேல்துண்டு போன்ற நினைவுப் பொருட்களை வழங்கியது. வடகிழக்கு கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகத்திலிருந்து பெறப்பட்ட கமுச்சா எனப்படும் மேல் துண்டு, அசாமின் அடையாளமாகக் கருதப்படுவதுடன் புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது. அதன் க்யூஆர் குறியீடு நம்பகத்தன்மையையும் அதை உருவாக்கிய கைவினைஞர்களைக் கண்டறிந்து சரிபார்க்கவும் அனுமதிக்கிறது. வடகிழக்கு கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் இந்தப் புதுமையான அணுகுமுறை நவீன தொழில்நுட்பத்துடன் பாரம்பரிய கைவினைத்திறனின் கலவையை எடுத்துக்காட்டுகிறது.

ஊடகத் குழுவுடனான கலந்துரையாடலின் போது, ஆளுநர் ரவி, தமிழ்நாடு, அசாம் ஆகியவற்றுக்கு இடையிலான சிறப்பான உறவை சுட்டிக்காட்டினார். குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டயப் படிப்பு நிறுவப்பட உள்ளதை அவர் அறிவித்தார். இது இரு மாநிலங்களுக்கும் இடையிலான கலாச்சார பரிமாற்றம், கல்வி ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். தமிழ்நாட்டின் டிஜிட்டல் மாற்றம் குறித்து எடுத்துரைத்த ஆளுநர், கல்வி, திறமை வாய்ந்த மனித ஆற்றலுக்கு முக்கியத்துவம் அளித்ததால் தான் தமிழ்நாடு மருத்துவச் சுற்றுலா மையமாக மாறியுள்ளது என்று கூறினார்.

பிராந்திய திறன் இடைவெளிகளைக் குறைக்கவும், பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தவும் அசாமில் திறன் மேம்பாட்டு மையங்களை நிறுவ ஆளுநர் அழைப்பு விடுத்தார். பழங்குடி இனத்தவர்களான இருளர் சமூகத்தினர், விஷம் பிரித்தெடுக்கும், நடைமுறையை இயற்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் மேற்கொள்வதையும் அவர்களது இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையும் ஆளுநர் பாராட்டினார். பிரித்தெடுக்கும் விஷத்திற்கு உரிய நியாயமான விலை கிடைக்காமல் இன்னும் அவர்கள் பின்தங்கிய நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அவர்களுக்கு விலை கிடைக்கச் செய்ய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவது அவசியம் என்று குறிப்பிட்டார். டிஜிட்டல் இணைப்பின் சக்தியை வலியுறுத்திய அவர், இன்றைய தகவல் யுகத்தில் புவியியல் ரீதியான தொலைவுகள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

அர்த்தமுள்ள கருத்துப் பரிமாற்றத்துடன் இந்தச் சந்திப்பு, அசாம் தமிழ்நாடு ஆகியவற்றுக்கு இடையிலான வலுவான கலாச்சாரம், கல்வி உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியது. வலுவான, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.

0Shares