ரேரா பதிவு கட்டண உயர்வுக்கு ஹென்றி கண்டனம்!
ரேரா பதிவு கட்டண உயர்வுக்கு ஹென்றி கண்டனம்!.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படும் மனைப் பிரிவு மற்றும் கட்டுமான திட்டங்களின் பதிவு கட்டண உயர்வுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் டாக்டர் ஹென்றி குறிப்பிட்டுள்ள கண்டன அறிக்கை,
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்ட ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு, ரியல் எஸ்டேட் துறையில் பெருமளவில் முதலீடுகளை ஈர்க்கவும், ஊக்குவிக்கவும், வாங்குபவர் மற்றும் விற்பவரிடையே வெளிப்படை தன்மையுடன் ரியல் எஸ்டேட் வணிகத்தின் பரிவர்த்தனைகளையும், செயல்பாடுகளையும், நெறிமுறைபடுத்தவும், ஒழுங்குபடுத்தவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும், வாங்குபவரின் உரிமைகளை பாதுகாக்கவும், நல்ல நோக்கத்தில் கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் கடந்த 22 ஜூன் 2017 முதல் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது.
இதில் ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்களால் அபிவிருத்தி செய்யப்படும் எட்டுக்கும் மேற்பட்ட யூனிட்கள் (அலகுகள்) அல்லது 500 சதுர மீட்டருக்கு மேல் நிலப் பரப்பு கொண்ட ரியல் எஸ்டேட் திட்டங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பது சட்டம்.
துவக்க காலத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் திட்டங்களை பதிவு செய்வதில் எளிமையின்றி பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தது.
இதில் உள்ள சிக்கல்களை களைந்து எளிமைப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ந்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும், முயற்சிகளையும் முன்னெடுத்தது.
இதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் திட்டங்களை பதிவு செய்வதில் சற்று மாற்றங்களை மேற்கொண்டு எளிமைப்படுத்தி இணையதளம் வாயிலாகவே எளிமையான முறையில் பதிவு செய்யும் வகையில் சட்ட விதிகள் மற்றும் நடைமுறையில் திருத்தங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியுள்ளது.
தனி அதிகாரம் பெற்ற ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, ஒழுங்குமுறை ஆணையத்தின் வளர்ச்சியையும், ஊழியர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, கடந்த 11.07.2024 இல் சுற்றறிக்கை எண். TNRERA/2784/2024. இன் மூலம் பலவகையான கட்டணங்களையும் உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிய வருகிறது.
மனைப் பிரிவு திட்டங்களுக்கு விற்பனைக்குரிய பகுதிக்கு மட்டும் சதுர மீட்டருக்கு ஐந்து ரூபாய் என இருந்ததை மாற்றியமைத்து, விற்பனைக்குரிய பகுதி, சாலைகள், திறந்தவெளி நிலம், பொது பயன்பாட்டிற்கும் ஒதுக்கப்படும் நிலங்கள் என மொத்த நிலப்பரப்பிற்கும் சதுர மீட்டருக்கு ரூபாய் ஐந்து எனவும்,
குடியிருப்பு கட்டடங்கள், 645 சதுர அடி வரையிலான திட்டங்களுக்கு சதுர மீட்டருக்கு 10 ரூபாயில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால் 645 சதுர அடிக்கு மேற்பட்ட திட்டங்களுக்கு சதுர மீட்டருக்கு ரூபாய் 20 என இருந்த பதிவு கட்டணம், தற்போது 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக கட்டடங்களுக்கு, சதுர மீட்டருக்கு 50 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிறவகை கட்டடங்களுக்கு சதுர மீட்டருக்கு 25 ரூபாய் என்ற கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கட்டட பணி நிறைவு சான்று பெறும் நிலையில், தடையின்மை சான்று பெறுவதற்கு முன் தனியாக கட்டணம் விதிக்கப்படவில்லை. தற்போது ஒரு விண்ணப்பத்துக்கு, 2,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத திட்டத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மனை வாங்கியோர் தனியாக விண்ணப்பித்தால், 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுக்கு பின் கட்டுமான திட்டத்தின் பெயர் மாற்றம், வங்கி மாற்றம், நிறுவனத்தின் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை மாற்றுவதற்கு, ஒவ்வொரு மாற்றத்துக்கும், 5,000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட திட்டங்கள் குறித்த அசல் ஆவணங்களின் பிரதி பெற, புதிதாக 2,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான திட்ட முடிவு சான்றிதழ் பெற, இதற்கு முன் தனியாக கட்டணம் அறிவிக்கப்படாத நிலையில், தற்போது, 5,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த, தனியாக ஆணை கோரி மனு செய்ய, 1,600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் முகவர்களாக பதிவு செய்ய, தனிநபர்களுக்கு, 25,000 ரூபாயும்; நிறுவனங்களுக்கு, 50,000 ரூபாயும் கட்டணம் உள்ளது. இதில் புதுப்பிக்க, தனிநபர்களுக்கு, 5,000 ரூபாய், நிறுவனங்களுக்கு, 50,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முகவர்கள் புதுப்பித்தலுக்கு காலதாமதமாக விண்ணப்பித்தால், தனிநபர்களுக்கு, 500 ரூபாயாகவும், நிறுவனங்களுக்கு, 5,000 ரூபாய் என செலுத்த வேண்டும்.
ஒரு கட்டுமான திட்டத்தை பதிவு செய்த நிறுவனம், அதை திரும்பப் பெற விண்ணப்பித்தால், பதிவு கட்டணத்தில், 10 சதவீத தொகை பிடித்தம் செய்யப்படும் எனவும்.
ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்த திட்டத்தில், குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடியாததால், கால அவகாச நீட்டிப்பு கோரி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பதிவு கட்டணத்தில், 10 முதல் 50 சதவீதம் வரையிலான தொகை வசூலிக்கப்படும் எனவும். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மேற்கண்ட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் பேசிய போது கோடிக்கணக்கான ரூபாயில் அபிவிருத்தி செய்யப்படும் ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு ஆயிரம் கணக்கில் உயர்த்தப்பட்ட கட்டணம் ஒன்றும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என பதிலாக சொல்லப்படுகிறது.
இருந்த போதிலும் ஒருபுறம் மனைப் பிரிவு மற்றும் கட்டட திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டண உயர்வு, மறுபுறம் பதிவுத்துறையில் பன்மடங்கு கட்டண உயர்வு, தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திலும் கட்டண உயர்வு என்பதை ஏற்க முடியவில்லை.
ஆகவே ரேராவின் இந்த செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது. மேலும் இந்த கட்டண உயர்வு மேம்பாட்டாளர்களிடையே பேரதிர்ச்சியையும் மிகுந்த வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஆகவே தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், இணையதளம் வாயிலாகவே எளிமையாக பதிவு செய்யப்படும் திட்டங்களுக்கு தான்தோன்றித்தனமாக இப்படி தன் இஷ்டத்திற்கு ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான பதிவு கட்டணத்தை உயர்த்தாமல், ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சங்கங்களை அழைத்து பேசி அவர்களின் கருத்துக்களை பெற்று, அதன் அடிப்படையில் நடைமுறைப்படுத்திட வேண்டும். ஆகவே தற்பொழுது உயர்த்திய கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என, ரேராவின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தும், அதேபோன்று கடந்த பிப்ரவரி 2024 முதல் காலியாக உள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பையும் உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.