ஆக்கிரமிப்பை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை.
30 சென்ட் நிலம் மாதம் 50 ரூபாய் வாடகை ஒப்பந்தம் முடிந்தும் காலி செய்ய மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்கள். இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு பெரும்பாலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 30 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில். பெரும்பாலும் உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் எந்த நிகழ்வாக இருந்தாலும் தொடங்கி தான் நடைபெறும். ஆக்கிரமிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் கோயில் சொத்துக்கள் முழுமையாக சிறைப்பட்டு இருப்பதால் கடந்த 29 ஆண்டுகளாக கோயில் குடமுழுக்கு கூட செய்ய முடியாத நிலையில் இருந்து வருவதாக சொல்லுகிறார்கள் பக்தர்கள்.
1960 ஆம் ஆண்டு சேலம் நல்லதம்பி என்பவருக்கு கோயிலுக்கு சொந்தமான குட்டை பகுதியை அடைத்து வியாபார நிறுவனங்கள் கட்டிக் கொள்ள தரைவாடையாக மாதம் 50 ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டு வழங்கப்பட்டது. ஒப்பந்தத்தில் நிர்வாகம் எப்போது சொத்துக்கள் வேண்டும் என்று கேட்டாலும் எந்தவித நிபந்தனைகளையும் இன்றி கட்டிடங்களை கோயிலுக்கு வழங்க வேண்டும் என்பதுதான்.
ஆனால் ஒப்பந்தம் போட்ட ஒரே ஆண்டில் விதிகளை மீறினார் நல்லதம்பி. 1961 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி 18 நபர்களுக்கு உள் வாடகைக்கு விட்டார் கோயில் நிலத்தை நல்லதம்பி. இது தொடர்பாக பலமுறை இந்து சமய அறநிலையத்துறை நல்லதம்பிக்கு எச்சரிக்கை விடுத்தும் செவி சாய்க்கவில்லை நல்லதம்பி. ஒரு கட்டத்தில் நல்லதம்பி இறந்து போக அவருடைய வாரிசுகள் அதே பணியை தொடர்ந்தனர். இப்படியாக இருக்க 2006 ஆம் ஆண்டு குத்தகை முடிவடைந்துவிட்டது. அரசு தரப்பிலும் எதிர்மனுதாரர்கள் தரப்பிலும் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு கட்டிடங்கள் திருக்கோயில் வசம் ஒப்படைக்க தீர்ப்பளிக்கப்பட்டது.
அடுத்ததாக நல்லதம்பி வாரிசுகள் மேல் முறையிட்டுக்கு செல்ல மேற்படி கட்டிடங்களுக்கு வாடகை செலுத்த சம்மதம் தெரிவித்து தொடர்ந்து தாங்களே அனுபவித்து வர அனுமதி கூறி விண்ணப்பித்ததாகவும், இந்த விண்ணப்பத்தை காரணம் காட்டி மேல் முறையிட்டு வழக்கினை வாபஸ் பெறுவதாக சார்பு நீதிமன்றத்தில் தெரிவித்து மேல் முறையிட்டு வழக்கினை முடித்துக் கொண்டனர்.
நல்லதம்பி குத்தகைக்கு பெறப்பட்டவுடன் அந்த பகுதியில் ஒரு ஓட்டல் நிறுவனம் நடத்தி வந்தார். உளுந்தூர்பேட்டை பகுதியில் கிருஷ்ணா பவன் என்ற ஓட்டல் யாருக்கும் தெரியாமல் இருக்க போவதில்லை, இப்படியான நிலையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கிருஷ்ண பவன் ஹோட்டல் உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டனர். ஆனால் உள்வாடகைக்கு இருக்கும் கடைக்காரர்கள் 9 பேர் இன்னமும் கடைகளை காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் சட்ட நடவடிக்கைகளிலும் கோயிலுக்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் இன்னமும் கோயில் நிலங்களை மீட்க முடியாமல் இருக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.
இது தொடர்பாக முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் திமுக நகர செயலாளராக இருந்த செல்லையா. கோயில் சொத்துக்களை தனிநபர் ஆக்கிரமிப்பதை ஒரு காலமும் அனுமதிக்க முடியாது. விரைவில் அமைச்சர் சேகர்பாபுவை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். சட்டப்படி தீர்ப்பு கோயிலுக்கு சாதகமாக இருந்தும் கூட சில தனிநபர்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுக்கிறார்கள். இந்த பிரச்சினையை இத்தோடு விடப் போவதில்லை தமிழக அரசின் கவனத்திற்கும், முதல்வர், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம் என்றார்.
கோயிலுக்கு சாதகமாக பக்தர்களுக்கு ஆதரவாக திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் நாராயணன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். விரைவில் கோயில் நிலம் முழுமையாக மீட்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் என்று பக்தர்களும் எதிர்பார்த்துக் காத்துஇருக்கிறார்கள்.
இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது மிக நீண்ட நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது திமுக ஆட்சியில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்கிறார்கள் பக்தர்கள்.