சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயலாளர் ச.விமலேஸ்வரன் அறிக்கை

Loading

பத்திரிகையாளர் அங்கீகார அட்டை வழங்குவது தொடர்பாக தீர்ப்பு :சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நன்றி
சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயலாளர் ச.விமலேஸ்வரன் அறிக்கை
என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற சொல்லுக்கேற்ப தன்னலம் நீக்கி, பொதுநலம் நோக்கி  செய்திச் சேவையை காலமெல்லாம் ஆற்றிவரும் பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் ஆசையும் அதற்கு உரிய அங்கீகாரத்தை அரசிடம் இருந்து பெறுவதுதான். அதற்காகவே, ஐக்கிய நாடுகள் சபை முதல் அதன் அங்கத்தினரான பல நாடுகளிலும் பத்திரிகையாளர்களுக்கான அங்கீகார அட்டையை (Press Accreditation Card)* வழங்குவது பல்லாண்டு காலமாகவே நடைமுறையில் உள்ளது. ஆனால், அந்த அங்கீகார அட்டையை தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, ஊடகத்துறை அதிகாரிகளை ஏதேனும் ஒரு வகையில் மிரட்டி தாங்கள் குறிப்பிடும் நபர்களுக்கு அதை வாங்கித் தருவதையும், அதில் சுயலாபம் அடைவதையுமே தங்கள் குறிக்கோளாக கொண்டு தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் ஒரு கும்பல் கனஜோராக இயங்கி வந்தது என்பதை அறிவார்ந்த பத்திரிகையாளர் எவருமே மறுக்க முடியாது.
அதே போல, ஏதோவொரு வகையில்’ பத்திரிகை அங்கீகார அட்டையை பெற்ற சிலர், ஏற்கனவே பணியாற்றிய பத்திரிகையிலிருந்து ஊழல் காரணமாக விரட்டியடிக்கப்பட்ட பின்னரும் போலியான தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் அந்த அங்கீகார அட்டையை புதுப்பித்து வந்ததையும் செய்தித்துறை அதிகாரிகள் யாருமே மறக்கவும் மாட்டார்கள். இந்த இடத்தில், திருவாளர் அசதுல்லா என்ற பெயர் தங்களுக்கு நினைவுக்கு வருமானால் அதற்கு நாம் பொறுப்பு கிடையாது!
அது போல, கடந்த 2019ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களுக்கான அங்கீகார அட்டையை பெற்றிருந்த திரு.அசதுல்லா என்பவர் ‘தனக்கு வேண்டிய’ சிலருக்கும் அதை பெற்றுத் தருவதற்கு பெறுமுயற்சி மேற்கொண்டார். ஆனால், *‘கழுதைகளுக்கு தெரியுமா கற்பூரா வாசனை?’* என்ற கேள்வியை அவரிடம் கேட்ட செய்தித்துறை அதிகாரிகள் திரு.அசதுல்லா அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தனர். இதனால், பெயர் சொல்ல விரும்பாத போதை பானத்தைப் போல பொங்கி எழுந்து அவர் செய்த காரியம்தான் அல்லும் பகலும் அயராது உழைத்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பத்திரிகையாளர்களின் கனவுகளை கருக்கியது.
ஆம். ‘தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும்’ என்ற குறுக்கு புத்தியோடு பத்திரிகையாளர் அங்கீகார அட்டை வழங்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கொன்றை அவர் தொடுக்க, அந்த வழக்கை காரணம் காட்டி அன்று முதல் புதிய பத்திரிகையாளர் அங்கீகார அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள்  நிறுத்தப்பட்டன என்பதையும், இதனால், எத்தனை மூத்த பத்திரிகையாளர்களும், உரிய அரசு பலன்கள் கிடைக்காமல் அவர்களின் குடும்பங்களும் வேதனை அடைந்தன என்பதை மனச்சாட்சி உள்ள அனைவருமே அறிவார்கள்.
‘வழக்குப் போட்டவர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்’ என நீதிமன்றம் பலமுறை வழியுறுத்தியும்,  நீதிமன்றம் கேட்ட எந்தவித ஆவணங்களையும் அவர் சமர்ப்பிக்காததாலும், வேண்டுமென்றே வழக்கை தள்ளிப் போட அவகாசம் கேட்டு வந்ததாலும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை தொடர்பான வழக்கானது விடை தெரியாத சிந்துபாத் கதை போல நீண்டு கொண்டே சென்றது. ஆவணங்களை வழங்க காலதாமதம் செய்த காரணத்திற்காக கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1000 ரூபாய் திரு.அசதுல்லா தரப்பிற்கு அபராதமும் விதித்து, அதை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் செலுத்த  உத்தரவும் பிறப்பித்தது* நீதிமன்றம். அதே நேரத்தில், அங்கீகார அட்டை கேட்டு வரும் மூத்த பத்திரிகையாளர்கள் பலருக்கும் பதில் சொல்லத் தெரியாமல் உண்மையிலேயே தினறி நின்றனர் நேர்மையான செய்தித்துறை அதிகாரிகள்.
அந்த சூழலில்தான், பத்திரிகையாளர்கள் பலரின் வேண்டுகோளுக்கும் இணங்க, ‘அந்த வழக்கில் என்னையும் ஒரு பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என கடந்த 2021 ஆம் ஆண்டு ச.விமலேஷ்வரன் ஆகிய நான் நீதிமன்றத்தை நாடினேன். அதற்கும் கூட எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றமே கோபமடையும் அளவிற்கு தங்களின் கீழ்த்தரமான வேலைகள் மூலம் திரு.அசதுல்லா தரப்பு எவ்வளவோ முயற்சி செய்தது. மேலும், அவ்வப்போது நான் கூறும் மிஸ்டர் 420 & கோ வினர் என் மீது போட்ட பொய் வழக்குகளை காரணம் காட்டி, என்னை அவ்வழக்கில் சேர்க்க விடாமல் இருக்க ‘ஜெகஜ்ஜால’ வேலைகளையெல்லாம் செய்தது திரு.அசதுல்லா தரப்பு. அதையும் மீறி என்னையும் ஒரு பார்ட்டியாக சேர்த்துக் கொண்ட மாண்பமை மிகு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எனது சிரம் தாழ்ந்த முதல் நன்றிகள்.
அதன் பிறகு, நீதியரசர்கள் கேட்டுக் கொண்ட ஆவணங்கள் அனைத்தும் என்னால் உடனுக்குடன் வழங்கப்படவே நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சூடுபிடித்த அந்த வழக்கில் இம்மாதம் 6 ஆம் தேதியன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி, அநீதியாளர்களின் மனப்போக்கு அறிந்து பத்திரிகையாளர்களின் நலன் கருதி நீதியை மீட்டெடுத்த மாண்பைமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் *மேன்மைமிகு நீதியரசர் திருமிகு.எம்.தண்டபாணி அய்யா அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கத்தோடு கூடிய நன்றிகள். மேலும், இந்த வழக்கை திறம்பட நடத்தி தடைகளை கடந்து எதிர்பார்த்த வெற்றியை ஈட்டித்தந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் திரு.ஏ.கே.கஜேந்திரா மற்றும் திரு.எம்.ஜனார்த்தனம் ஆகியோர்களுக்கும் எனது கோடானு கோடி நன்றிகள்.
வழக்கு தொடுத்த நபர் இழுத்தடித்த போதும், அனைத்து பத்திரிகையாளர்களின் நலன் கருதி சி.விமலேஸ்வரன் என்ற இந்த சாதாரன நபரை வழக்கில் இணைத்து, நான் வழங்கிய ஆவணங்களை சரிபார்த்து, அதில் கோரியுள்ள வேண்டுகோள்களின் உண்மைத் தண்மையை உணர்ந்து, இன்றிலிருந்து 12 வாரங்களுக்குள் பத்திரிகையாளர் அங்கீகார கமிட்டியை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு அவர் உத்தரவிட்ட நகல் (W.P.No.109 of 2020 & W.M.P.No.133 of 2020)சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த இனிய நாளில் எனது முயற்சிகளுக்கு உறுதுணையாக நின்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், எனது பணிவான நன்றிகளை பெருமகிழ்வோடு சமர்ப்பிக்கிறேன்.
‘ஆடு நனைகிறதே’ என்றழும் ஓநாய்களின் கொட்டம் அடங்கட்டும்!
‘இனி, வருங்காலம் நமதே’ என்ற குரலெங்கும் ஒலிக்கட்டும்என்று சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயலாளர்
ச.விமலேஷ்வரன்,வெளியிட்டுள்ள அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *