உட்பிரிவு அனுமதி பெற்ற மனைகளை பதிய பதிவாளர்களுக்கு சரியான தெளிவுரை வழங்க கோரி பதிவுத்துறை தலைவருக்கு FAIRA தலைவர் டாக்டர். ஆ.ஹென்றி கடிதம்
உட்பிரிவு அனுமதி பெற்ற மனைகளை பதிய பதிவாளர்களுக்கு சரியான தெளிவுரை வழங்க கோரி பதிவுத்துறை தலைவருக்கு FAIRA தலைவர் டாக்டர். ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழகம் முழுவதும் மனைப் பிரிவு அனுமதி மற்றும் உட்பிரிவு அனுமதி என சம்பந்தப்பட்ட அதிகார குழுக்கள் CMDA மற்றும் DTCP வழங்குகின்றன. இதில் பெருநகர் வளர்ச்சி குழுமம் மற்றும் புது நகர் வளர்ச்சி குழுமமும் அடங்கும். மேலும் மேற்கண்ட அதிகார குழு 24 சென்ட் நிலத்தில் எட்டு அலகுகள் வரை உள்ள மனைப் பிரிவிற்கு உட்பிரிவு அனுமதி வழங்கும் அதிகாரத்தை
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் போன்ற துணை அதிகார குழுக்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் அதிகாரப் பகிர்வை பகிர்ந்து வழங்கி உள்ளது.
இதில் எட்டு அலகுகள் அல்லது 500 சதுர மீட்டருக்கு மேல் உள்ள மனைப் பிரிவுகளை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திலும் பதிவு செய்து உத்தரவு பெறும் நடைமுறையும் வழக்கத்தில் உள்ளது.
இப்படி சம்பந்தப்பட்ட துணை அதிகார குழுக்களுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மனை உட்பிரிவு அனுமதி பெற்று, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திலும் பதிவு செய்து உத்தரவு பெற்று, பதிவு அலுவலகங்களில் மேற்கண்ட மனைகளை பதிவு செய்ய முற்படும்போது சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் மனை உட்பிரிவு அனுமதி பெற்ற மனைகளை பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை தலைவர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி ஆவணத்தை பதிவு செய்யாமல் நிராகரிக்கின்றனர்.
இதனால் மனைகளை முன்பதிவு செய்து வங்கியில் கடன் பெற்று ஆவணங்களை தயாரித்து, உரிய கட்டணங்களை செலுத்தி பதிவு அலுவலகத்தில் ஆவணத்தை பதிவுக்கு தாக்கல் செய்த பிறகு சார் பதிவாளர்களின் இப்படிபட்ட செயலால் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களும், வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் மிகுந்த பாதிப்புக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
மேலும் மேற்கண்ட பரிவர்த்தனைகளில் எண்ணற்ற சிரமங்களையும் பிரச்சனைகளையும் அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை தலைவர் அவர்கள் மேற்கண்ட பிரச்சினைகளை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு கனிவுடன் பரிசீலித்து, தகுந்த தெளிவுரையையும், வழிகாட்டுதலையும் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்களுக்கு தாங்கள் வழங்கிட வேண்டுமென டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.