திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடப் பணிகளுக்கு முதல்வர் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்

Loading

 திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆறுபடைகளில் ஐந்தாவது படை வீடாக திகழ்கிறது. மாநிலங்கள் கடந்து ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் அறநிலையத்துறை தொடர்பான விதிமுறைகள் மற்றும் சட்ட விதி முறைகள் ஆகியவை குறித்து பல்வகையில் சிறப்பு மிக்க வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க இத்திருக்கோயில் தணிகை இல்ல வளாகத்தில் தங்கி பயிற்சி பெற ரூ.16.50 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில் பணியாளர்களுக்கான பயிற்சி மையம் கட்டப்படவுள்ளது. இப்பயிற்சி மையத்தில் திருக்கோயில் பணியாளர்கள் தங்களது பணியில் சிறந்து விளங்க சிறப்பாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இத்திருக்கோயிலில் அனைத்து தரப்பு பக்தர்களும் பிரார்த்தனையின் பேரில் திருமணம் செய்வது சிறப்பான ஒன்றாகும். அதனால் இத்திருக்கோயில் தணிகை இல்ல வளாகத்தில் ரூ.9.63 கோடி மதிப்பீட்டில்; 500 நபர்கள் அமரக்கூடிய வகையில் அனைத்து வசதிகளுடன் ஒரு திருமண மண்டபமும், 100 நபர்கள் அமரக்கூடிய வகையில் ரூ.13.90 கோடி மதிப்பீட்டில் நான்கு திருமண மண்டபமும் கட்டப்படவுள்ளது. இந்த திருமண மண்டபங்களில் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இன்று திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள தணிகை இல்ல வளாகத்தில் ரூ16.50 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில் பணியாளர்களுக்கான ஒரு பயிற்சி மையமும் ரூ9.63 கோடி மதிப்பீட்டில் 500 நபர்கள் அமரக்கூடிய ஒரு திருமண மண்டபமும் ரூ13.90 கோடி மதிப்பீட்டில் தலா 100 நபர்கள் அமரக்கூடிய 4 திருமண மண்டபங்களும் என மொத்தம் ரூ.40.03 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி,  பணிகளை துவக்கி வைக்கும் நேரலை நிகழ்ச்சியில் திருத்தணிகையிலிருந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் காணொளி காட்சி மூலமாக கலந்து கொண்டு நன்றி தெரிவித்து அப்புதிய கட்டுமான பணிகள் நடைபெற உள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.

இதில் இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் லஷ்மணன், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் துணை ஆணையர் விஜயா, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் (பொ) மதுசூதணன், திருத்தணி காவல் துணைக் கண்காணிப்பாளர் த.விக்னேஷ், திருத்தணி நகர் மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாமிராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *