எதிர்க்கட்சிகளால் பெரிதாக சிந்திக்க முடியவில்லை- பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகளால் பெரிதாக சிந்திக்க முடியவில்லை- பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகளால் பெரிதாக சிந்திக்க முடியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
பாஜக தொடங்கப்பட்டதன் 44-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி கட்சியினருக்காக உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் வீடியோ நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்களில் ஒளிபரப்பப்பட்டது.
இதில் பிரதமர் மோடி கூறி இருந்ததாவது: ”ராமபக்தர் அனுமனின் பிறந்த நாள் இன்று. அனுமனுக்கும் பாஜகவுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. மற்றவர்களுக்காக அனுமன் எதையும் செய்ய வல்லவர். ஆனால், அவர் தனக்காக எதையும் செய்துகொள்ளாதவர். இந்த இயல்புதான் பாஜகவை இயக்கிக் கொண்டிருக்கிறது.
அனுமன் தனது சக்தியை உணர்ந்து கொண்டது போல இந்தியா தற்போது அதன் சக்தியை உணர்ந்து கொண்டிருக்கிறது. ஊழலுக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் தேவையான உந்துதலை பாஜக அனுமனிடம் இருந்து பெறுகிறது. அனுமனின் முழு வாழ்க்கையையும் பார்த்தால், ‘நம்மால் முடியும்’ என்ற எண்ணம்தான் அவரது அனைத்து வெற்றிக்கும் காரணமாக இருந்துள்ளது. பாஜகவினர் ஒவ்வொருவருக்கும் அனுமனின் ஆசி கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
பாஜகவின் இந்த நிறுவன நாளில் தாய்நாட்டின் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் தலை வணங்குகிறேன்.
பாஜக சமூக நீதியில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே, ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன; சுகாதார காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகளால் பெரிதாக சிந்திக்க முடியவில்லை. சிறிய அளவிலான இலக்குகளையே நிர்ணயித்து அதிலேயே அவை திருப்தி அடைந்து விடுகின்றன. மிகப் பெரிய கனவுகளைக் காண்பதிலும், மிகப் பெரிய இலக்குகளை அடைவதிலும் பாஜக நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்படும் என எதிர்க்கட்சிகள் ஒருபோதும் எண்ணியதில்லை.” இவ்வாறு அவர் உரையாற்றினார்.