தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு சட்ட சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரைவில் 2023- 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு எண்.44 இல் சொத்துக்களை வாங்குகின்ற பொது மக்களின் சுமையை குறைக்கும் வகையில் பதிவு கட்டணம் நான்கு சதவீதத்தில் இருந்து இரண்டு சதவீதம் குறைப்பு எனவும், மேலும் வழிகாட்டி மதிப்பை 08/06/2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்தவும் அரசு அறிவிப்பு செய்தது.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண். 5247/எல்1/2023-1 நாள்: 30.03.2023 இல் 08/06/2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக தற்போதைய சந்தை வழிகாட்டி மதிப்பு இணையதளத்தில் மாற்றப்படும் எனவும், 09/06/2017 அன்று அல்லது அதன் பின்பு விளைநிலங்கள், மனைகளாக மாற்றப்பட்டுள்ள நிகழ்வில், நிர்ணயிக்கப்பட்ட மனை மதிப்பானது 08/06/2017 அன்று இருந்த மதிப்புடன் ஒப்புநோக்கப்பட்டு இவற்றில் எது அதிகமோ அதனை வழிகாட்டி மதிப்பாக இருத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது பதிவு துறையின் இணையதளத்தில் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ள வரைவுக்கு மாறாகவும், பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வரைவுக்கு மாறாகவும் பொத்தம் பொதுவாக கடந்த மார்ச் மாதம் வரை 08/06/2017 க்கு முன்பு இருந்த மதிப்பை விட பன்மடங்கு வழிகாட்டி மதிப்பு மதிப்பு நிர்ணயம் செய்துள்ள மனைகள் உள்ளிட்ட அனைத்து இனங்களுக்கும் ஒரே சீராக வழிகாட்டி மதிப்பினை 50% உயர்த்தி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டு பொதுமக்களும், அபிவிருத்தியாளர்களும் பேரதிர்ச்சியுற்று மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை தலைவர் அவர்கள் தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு கனிவுடன் பரிசீலித்து, விரைவாக தகுந்த தீர்வினை ஏற்படுத்தி தரவேண்டும் என டாக்டர். ஆ.ஹென்றி அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.