அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்ட கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் பருவமழை பொய்த்து போனதால் ஊரணிகள், குட்டைகள், குளங்கள், சிறு பாசன குளங்கள், நீர்வள ஆதாரத்துறை பாசன குளங்கள் என அனைத்து நீர் நிலைகளும் வறண்டு வருகின்றன. இதனால் கோடையில் கடும் குடிநீர், கால்நடைகளுக்கான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தவிர பருவமழை பொய்த்து போனதால் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள், பணப் பயிர்கள் அனைத்தும் போதிய விளைச்சலை தரவில்லை. இந்நிலையில் ஊரக வளச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரணிகள், குட்டைகள், சிறுபாசன குளங்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மண் மேடாகி மழைநீர் தேக்கமுடியவில்லை. தவிர ஒவ்வொரு ஆண்டும் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாசன குளங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தூர்வாரப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது இந்தாண்டு கடும் வறட்சி என்பதல் நீர்நிலை தூர்வாருவதற்கு நல்ல வாய்ப்பாக உள்ளது. தவிர விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எனப்படும் கரம்பை மண் வேண்டும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு முகாமில் மனு அளிக்கலாம். அதனடிப்படையில் கரம்பை மண் அள்ள உரிய விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது. விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்கள் வட்டாச்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக மண் பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. மண் பரிசோதனை மையம் பரிந்துரைக்கு பின் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர். இதுபோன்ற கெடுபிடி விதிமுறைகளால் சாமானிய விவசாயிகள் கரம்பை மண் அள்ள முடியாது. இதே நடைமுறை கடந்தாண்டும் அரசு பின்பற்றியதால் விவசாயிகளால் கரம்பை அள்ள முடியவில்லை.இதனால் அரசு அறிவிப்பு வெறும் காணல் நீராகிவிடும். விதிமுறைகளை தளர்த்தி எளிய முறையில் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் பரிந்துரை அடிப்படையில் கரம்பை மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.