புதுச்சேரி சட்டப்பேரவையில் 14-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்
மாநில அந்தஸ்து கோரி
புதுச்சேரி சட்டப்பேரவையில் 14-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்
மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் சட்டப்பேரவையில் மாநில அந்தஸ்து கேட்டு 13 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியும் இது வரை நடவடிக்கை இல்லை, மக்கள் தேர்ந்தேடுத்து, மக்கள் பிரதிநிதிகளை விட மத்திய அரசு நியமிக்கும் ஆளுநருக்கே புதுச்சேரியில் அதிகாரம் அதிகம், இதனால் மக்கள் வாக்குக்கு இதர மாநிலங்களை போல் மதிப்பில்லை என்ற சூழல் தான் தற்பொழுது உள்ளது.
புதுச்சேரியில் பெரியளவு தொழிற்சாலை இல்லை, பல தொழிற்சாலை மூடப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வு தமிழகத்தை விட அதிகரித்து வருகிறது. நிதி பற்றாக்குறை, தொழிற்சாலை மூடல் என பல்வேறு பிரச்சனைகள் அரசும், மக்களும் சிக்கித்தவிக்கின்றனர். மாநில அந்தஸ்தை வலியுறுத்தி தனிக்கட்சி தொடங்கிய முதல்வர் ரங்கசாமி தற்பொழுது மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். புதுச்சேரியில் அதிக ஆண்டு முதல்வராக இருப்பதும் இவர்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை நேற்று காலை தொடங்கியது. அப்பொழுது முதல் தனி உறுப்பினர்கள் தீர்மானங்களாக பல்வேறு கட்சிகள் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை முன்வைத்து தீர்மானம் கொண்டு வந்தனர். புதுச்சேரி மாநில அந்தஸ்தை வலியுறுத்தி ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதை அரசு தீர்மானமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் மேலும் இது தொடர்பாக அனைத்தும் உறுப்பினர்களும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் கொண்டுவந்த தனி நபர் தீர்மானம் அரசின் தீர்மானமாக ஏற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக உறுப்பினர்கள் சிவா, நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார் கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்துக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளார். திமுக கொண்டு வந்த தீர்மானத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார். மாநில தகுதி கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்ககோரிய தீர்மானம் அரசின் தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.