இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்கக்கோரி விவாசயிகள் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் முற்றுகை :

Loading

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரையிலான 126 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாயில் 6 வழி சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.  இதற்காக தச்சூர் முதல்  சித்தூர் வரை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. ஆனால் விவசாயிகளிடமிருந்து பெறும் விவசாய நிலத்திற்கு அரசு சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை குறைவாக இருப்பதாக கூறி விவசாயிகள் சங்கத்தினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.   பல இடங்களில் விவசாயிகளுக்கு போதிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு பணிகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் 6 வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை 6 மடங்காக உயர்த்தி தர வேண்டும் என்றும்  ஆறு வழிச்சாலை அமைக்கும் போது அந்தச் சாலை பொதுமக்களுக்கு பயனடையும் வகையில்  அருகில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் ஊத்துக்கோட்டை தாலுக்காவிற்குட்பட்ட  கும்பாக்கம் பேரண்டூர், மாம்பாக்கம், போந்தவாக்கம், மேலகரமனூர், புதுச்சேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 500 விவசாயிகள் நிலத்தை கொடுக்க விருப்பமில்லை என தெரிவித்ததால் நேரில் ஆஜராகி மனு கொடுக்க திருவள்ளூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் என்பவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனையடுத்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் இருந்து பேரணியாக வந்து பெரியகுப்பத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு வந்தனர்.  ஆனால் விசாரணைக்கு வரச் சொன்ன அதிகாரி இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியும் அதிகாரி வராத நிலையில் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் எனக் கூறி விவசாயிகள் அலுவலக வளாகத்தில் காத்துக் கிடந்தனர்.
இந்நிலையில் 3.30 மணியளவில் அலுவலகத்திற்கு வந்த தேசிய நெடுஞ்சாலை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். எங்களின் வாழ்வாதாரமான விவசாய நிலத்தை ஒப்படைத்து அதற்கு இழப்பீடாக வழங்கும் தொகை மிகவும் குறைவாக இருப்பதால் நிலத்தை ஒப்படைக்க மாட்டோம் என பெரும்பாலான விவசாயிகள் தெரிவித்தனர். இதனயைடுத்து ஒவ்வொரு கிராமம் சார்பாக கோரிக்கைகளை கேட்டறிந்த அதிகாரி, இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *