திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், மோரை ஊராட்சி, வீராபுரம் அரசு உயர்நிலை பள்ளியானது இடவசதி காரணமாக புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து, வீரபுரம் பகுதியில் உள்ள அப்புதிய பள்ளி வளாகத்தை பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, பார்வையிட்டு தலைமை தாங்கி மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கி பேசினார்.
இப்பள்ளி 2017-ம் ஆண்டு முதல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது தொடக்கப்பள்ளி வளாகத்திலேயே உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. இட நெருக்கடி குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், கல்வி நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தனியார் நிறுவனம் சார்பாக இயங்கப்பட்டிருந்த இப்பள்ளி தற்போது அரசுடைமையாக்கப்பட்டு வீராபுரம் பள்ளியோடு பல்வேறு வகுப்புகள் நடத்தும் ஒரு பள்ளி வளாகமாக ஏற்பட்டிருப்பது சந்தோஷமான ஒரு தருணம் ஆகும்.
இந்த பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் கழகம், ஊராட்சி மன்ற தலைவர் என அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த பள்ளி மேன்மேலும் வளர வேண்டும். இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் சமுதாயத்தில் பல்வேறு பெரிய பொறுப்புகளுக்கு செல்ல வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்திலேயே இந்த பள்ளி மிகச் சிறந்த பள்ளியாக மாற்ற வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஒரு கட்டமைப்பு வசதியாக இருக்கக்கூடிய ஒரு பள்ளிக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். கட்டமைப்பில் மட்டுமல்ல கல்வியின் தரத்திலும், தேர்ச்சி விகிதத்திலும், மாணவர்களுக்கு கல்வியை பகிர்ந்துகொள்ளக்கூடிய கற்பிக்கும் திறனிலும் திருவள்ளூர் மாவட்டத்திலேயே ஒரு முன்னோடி பள்ளியாக இப்பள்ளி விளங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், முதன்மை கல்வி அலுவலர் த.ராமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) விஜயானந்த், வில்லிவாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெட்ரிக் அருண்குமார், வெங்கடேசன், ஆவடி வட்டாட்சியர் வெங்கடேசன், மோரை ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.திவாகரன், வீராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.மலர்கொடி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.