முத்திரைத் தாள் விநியோகம் இல்லாததால் பொது மக்கள் அவதி
திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நாள் தோறும் 200-க்கும் மேற்பட்ட சொத்துக்கள் பதிவு செய்யப்படுகின்றன. அந்த சொத்துக்களுக்கான ஆவணங்களை பதிவு செய்ய முத்திரைத் தாள் மிகவும் அவசியம். ஆனால் திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் 10 ரூ, 20 ரூ, 50ரூ, 100 ரூ, 200ரூ 500 ரூ மதிப்பிலான முத்திரைத் தாள்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது பதிவுக் கட்டணங்கள் விலை அதிகமான நிலையில் ஆயிரம், 2 ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம் மதிப்பிலான முத்திரை தாள்கள் மாவட்ட தலைநகர் திருவள்ளூரில் கிடைப்பதில்லை. கிட்டத்தட்ட 22அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் உள்ள நிலையில் ஒருவரிடமும் இந்த விலை உயர்ந்த முத்திரை தாள் கிடைப்பதில்லை. அவர்கள் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலத்தில் உள்ள அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இந்த விலை உயர்ந்த முத்திரை தாள் கிடைப்பதில்லை என்று கூறினார்.
ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள விற்பனையாளர்கள் திருவள்ளூரில் இந்த விலை உயர்ந்த முத்திரை தாள்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். அந்த முத்திரை தாளுக்கு அரசின் விதிமுறைகளை மீறி கூடுதல் தொகையும் வசூல் செய்கின்றனர். ஆயிரம் ரூபாய்க்கு 20 ரூபாய் வீதம் அதிகமாக வசூல் செய்கின்றனர்.
எனவே திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் உள்ள முத்திரை தாள் விற்பனையாளர்களுக்கு இந்த விலை உயர்ந்த முத்திரைத் தாள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரி்ககை விடுத்துள்ளனர்.