கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

Loading

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அரியலூர்  மாவட்டம், ஜெயங்கொண்டம் தனியார் மண்டபத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (16.03.2023) நடைபெற்றது.இந்நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சொ.க.கண்ணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.பின்னர், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிற்கிணங்க ஜெயங்கொண்டத்தில் உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நம்முடைய முன்னோர்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்ற நோய்கள் இல்லை மேலும், நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். சத்தான உணவுகளை உட்கொண்டதே நமது முன்னோர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு காரணமாகும். எனவே, தற்பொழுது தமிழக அரசு 0 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளது.தற்பொழுது பெரும்பாலான மக்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்ற தொற்றாநோய்கள் உள்ளது. இதற்கு பொதுமக்கள் சரியான முறையில் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாததால் உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு தற்பொழுது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் நோயாளிகளுக்கு அவர்களது இல்லங்களுக்கே நேரடியாக சென்று மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. மேலும், நோய்களின் தன்மைக்கு ஏற்ப மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்கள் ஏற்பட்ட பிறகு மருத்துவம் பார்ப்பதை விட நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் உணவு முறைகளை மாற்ற வேண்டும். எனவே, பொதுமக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதுடன் ஆரோக்கியமான உணவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் இதனை உரிய முறையில் கண்டு பயன்பெற வேண்டும். மேலும், நமது பாரம்பரிய நெல் இரகங்கள் குறித்தும் அறிந்து பயன்பெற வேண்டும்.மண் வளத்தை பாதுகாக்கவும் பாரம்பரிய விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் உரிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருவதுடன் விவசாயிகளுக்கு தேவையான வேளாண் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வருங்காலத்தில் நமது மண்ணுகேற்ற வகையில் பயிரிடக்கூடிய பயிர்களை விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இது போன்ற கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு இது போன்ற கண்காட்சிகள் வாய்ப்பாக அமைந்துள்ளது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பிற்கிணங்க புதிய வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்கி அதிக இலாபம் பெற்று விவசாயிகள் பயன்பெற வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டில் 38 ஊராட்சிகளும் 2022-23 ஆம் ஆண்டில் 40 ஊராட்சிகளிலும் கலைஞரின் அனைத்து கிராம மறுமலர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டு தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எண்ணற்ற விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். இதே போன்று தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. எனவே, வேளாண்த்துறையுடன் இணைந்து கால்நடைத் துறையும் விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, தமிழக அரசின் இது போன்ற வேளாண் திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் மேலும் இன்று நடைபெறும் பாரம்பரிய இரகங்கள் குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியில் கலந்துகொண்டுள்ள விவசாயிகள் இது குறித்த தங்களது பகுதிகளில் உள்ள பிற விவசாயிகளுக்கு பாரம்பரிய இரகங்கள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய நெல் இரகங்கள், பழவகைகள், காய்கறிகள், இயற்கை உரங்கள் போன்றவற்றை பார்வையிட்டு கேட்டறிந்தார்கள்.  இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் திரு.இரா.பழனிசாமி, வேளாண் துணை இயக்குநர்கள்  திரு.பழனிசாமி, திரு.கண்ணன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் திரு.ஆனந்தன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர்(பொ) திரு.குமரகணேஷ், உதவி இயக்குநர்கள் திரு.தெய்வீகன், திரு.சுப்ரமணியன், அட்மா குழுத்தலைவர்கள் திரு.மணிமாறன், திரு.தர்மதுரை, திரு.சௌந்தர்ராஜன், முதுநிலை விஞ்ஞானி திரு.அழகு கண்ணன், இணை பேராசிரியர் (பூச்சியியல்) திருமதி.இந்திராகாந்தி, உதவி பேராசிரியர்(மண்ணியல்) திரு.மணிகண்டன், தொழில்நுட்ப உதவியாளர் (செயலாக்கம்) திருமதி.மீனாலட்சுமி, இயற்கை விவசாயி திரு.நாகராஜன்,  விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *