ரூ.25 கோடி மதிப்பீட்டில் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் சோதனை ஓட்டம் வெற்றி :

Loading

திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைத்திய வீரராகவர் கோவிலில் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் இங்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம்,  வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து,  ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  இத்திருத்தலத்திற்கு வந்து கோவில் குளத்தில் நீராடி,தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்து விட்டு ஸ்ரீ வீரராகவரை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.  இந்த கோயில் குளம் கடந்த 2015-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு குளமாகவும் மற்ற இடம் காலியாகவும் இருந்தது. இதில் அமாவாசை தினத்தில் வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் மாறிப் போயிருந்தது.  இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகினர்.
இந்நிலையில் கடந்த 2015-ல் பெய்த மழை காரணமாக திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஏரி நிரம்பியதால் அதன் உபரி நீர் வீரராகவர் கோயிலுக்கு திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏரி முழுவதும் நீர் நிரம்பி காணப்படுகிறது.  மேலும் மாசுபடாமல் இருக்க நீரை மறு சுழற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் தற்போது இருக்கும் நீரை அகற்றிவிட்டு புதிய நீரை சேமித்து வைக்க வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்று வீரராகவர் கோயில் நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம்  கோரிக்கை விடுத்தனர்.  இதனையடுத்து  கோயில் குளத்தில் எந்நாளும் நீர் இருக்க வேண்டும் என்பதற்காக நபார்டு திட்டத்தின் கீழ் நீர்வளத்துறை சார்பில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டம்  பட்டரைப் பெரும்புதூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் அணைக்கட்டு பகுதியிலிருந்து நீர் கொண்டு வரும் திட்டம் கடந்த 2015-ல் தொடங்கப்பட்டது.  பட்டரைப்பெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் வீரராகவர் கோயில் வரை 13 கி.மீட்டர் தூரத்திற்கு  பைப் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டது. அதற்காக சிறு மதகுகள் மற்றும் டேங்க் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 13 கி.மீட்டர் தூரத்திற்கும் பைப் லைன் அமைக்கும் பணிகள் தொடங்கி தற்போது நிறைவு பெற்றது. இதனால் பட்டரைப்பெரும்புதூரில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் பட்சத்தில் வினாடிக்கு 10 ஆயிரம் லிட்டர் வந்து சேரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.  இந்நிலையில் பட்டரைப் பெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளம் வரை உள்ள 13 கி.மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட பைப் லைனில் கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா.. அல்லது விரிசல் போன்ற ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக சோதனை ஓட்டம் நடைபெற்றது.  நேற்று பிற்பகல் 2.45 மணி திறக்கப்பட்ட நீரானது ஒரு மணி நேரத்தில் 13 கி.மீட்டர் தூரம் கடந்து வீரராகவர் கோயில் குளத்தை நீர் வந்தடைந்தது. இதனை திருவள்ளூர் கொசஸ்தலையாரு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சி.பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்தியநாராயணன், உதவி பொறியாளர் லோகரட்சகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  அப்போது 13 கி.மீட்டர் தூரத்திலும் கசிவோ, அடைப்போ எதுவும் இல்லாததால் இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாகவும்,கோயில் நிர்வாகம் சார்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்தின்படி முறைப்படி தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் திறந்து வைப்பார் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *