யுகே இசைக்கலைஞர்களை ஊக்குவித்த இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்.
இந்தியா / யுகே டுகெதர் ய சீசன் ஆஃப் கல்ச்சர் என்ற பெயரில் ஓராண்டு காலமாக நடைபெற்ற தொடர் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு நிகழ்வாக, மக்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற நட்புறவிற்கான இசை நிகழ்ச்சி, சென்னை மாநகரை இசை வெள்ளத்தில் ஆழ்த்தியது. பிரிட்டிஷ் கவுன்சில் ஒத்துழைப்போடு, கேஎம்மியூசிக்கன்சர்வேட்டரியால் இந்த மாபெரும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியா மற்றும் யுகே என்ற இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் பகிரப்படும் கலாச்சார பாரம்பரியத்தின் கொண்டாட்டமாக இது அமைந்தது. பிரிட்டிஷ் கவுன்சிலின் தென்னிந்தியாவிற்கான இயக்குனர் ஜனகா புஷ்பநாதன் பேசுகையில், “நட்புறவிற்கான இசை நிகழ்ச்சி (தி கான்செர்ட் ஃபார் ஃபிரெண்ட்ஷிப்) என்பது, நாடுகளின் எல்லைகளைக் கடந்து மக்களை ஒன்றாக ஒருங்கிணைக்கும் இசை என்ற உலகளாவிய பொது மொழியின் ஒரு உண்மையான கொண்டாட்டமாகும். ‘இந்தியா / யுகே டுகெதர், சீசன் ஆஃப் கல்ச்சர்’ என்பதன் ஒரு பகுதியாக இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. ஸ்காட்லாந்து மற்றும் நம் இந்தியாவின் நாகலாந்து மற்றும் சென்னையைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான இளம் இசைக்கலைஞர்களை இந்நிகழ்ச்சி ஒரே மேடையில் ஒருங்கிணைத்திருக்கிறது. எமது கலாச்சார பருவ நிகழ்வின் தூதரான திரு. ஏஆர். ரஹ்மான் அவர்கள் வழங்கியிருக்கும் ஆதரவிற்கு எமது மனமார்ந்த நன்றி; இசையும், கலாச்சாரமும் சங்கமிக்கும் இந்த மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்குவதற்கு திறமைமிக்க இந்த மாணவர்களுக்கு உத்வேகமளித்து, இந்நிகழ்வை ஒருங்கிணைக்க வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏஆர் ரஹ்மான் ஃபவுண்டேஷனின் சன்ஸைன் ஆர்க்கெஸ்ட்ரா கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரி மற்றும் சிஸ்டிமா ஸ்காட்லாந்து – ன் பிக் நாய்ஸ் ஆகியவற்றின் கூட்டுவகிப்பு செயல்பாட்டில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சி, வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களுக்கு அவர்களது திறமைகளை பலரும் அறிய காட்சிப்படுத்துவதற்கு ஒரு உலகளாவிய தளத்தை வழங்குவது என்ற எமது சீசனின் குறிக்கோளை நிஜமாக்கியிருக்கிறது; அத்துடன், இசை என்ற மாபெரும் சக்தியின் வழியாக பார்வையாளர்களை ஒருங்கிணைப்பதிலும் வெற்றி கண்டிருக்கிறது,” என்று கூறினார்.