தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் உள்ள அம்மா உணவகம் முன்பு தமிழக கேரளா எல்லைப் பகுதியான புளியரை சோதனைச் சாவடி வழியாக அளவிற்கு அதிகமாக கனிம வளங்களை கொண்டு செல்லப்படுவதைக் கண்டித்து பா.ம.க மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக நாள் தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம், கடையம் உட்பட பல்வேறு பகுதிகளில் அளவிற்கு அதிகமாக கனிம வளங்கள் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாகவும், கனரக வாகனங்களால் சாலைகள் மற்றும் குடிநீர் குழாய்கள் பழுதடைந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் கனிம வளங்கள் தங்கு தடையின்றி கேரளாவிற்கு நாள்தோறும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று தென்காசி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம், விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் ஆகிய அமைப்பினர் ஒன்றிணைந்து செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே உள்ள அம்மா உணவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகளின் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை, மாநில செயற்குழு உறுப்பினர் சேது. அரிகரன், திருமலை குமாரசாமி,சாகுல் ஹமீது மாவட்ட செயலாளர் Dr.சீதாராமன், மாவட்ட தலைவர் குலாம், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணன், செங்கோட்டை நகர செயலாளர் வழக்கறிஞர் அபு அண்ணாவி,நகர தலைவர் செண்பக குமார், ஒன்றிய செயலாளர் சாமுவேல், தலைவர் பாலகிருஷ்ணன் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகேஷ், தர்மராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.