சிரிக்க வைப்பது கடினம்-ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள படம், ‘சொப்பன சுந்தரி’. எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், லட்சுமி பிரியா சந்திரமவுலி, தீபா சங்கர், கருணாகரன், சுனில் ரெட்டி உட்பட பலர் நடித்துள்ளனர். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜ்மல் தஹ்ஸீன் இசை அமைத்துள்ளார். பின்னணி இசையை விஷால் சந்திரசேகர் அமைத்திருக்கிறார். ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ், அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. இதன் முன்னோட்டம், சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. விழாவில் மோகன் ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “ இதுவரை இல்லாத வகையில் இதில், நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். யாரையும் கண்ணீர்விட வைப்பது எளிது. ஆனால் சிரிக்க வைப்பது சாதாரண விசயமல்ல. அதை சரியாகச் செய்துவிட்டால் அவர்களை விட சிறந்த நடிகை வேறு யாரும் இருக்க முடியாது. அதை இந்தப் படத்தில் முயற்சித்திருக்கிறேன். இந்தப்படத்தில் இயக்குநர் சொல்லித் தந்ததை அப்படியே பிரதிபலித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” என்றார்.