ரித்திகா சிங் நடிக்கும் பான் இந்தியா படம்
இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரித்துள்ள படம், ‘இன் கார்’. ஹர்ஷ்வர்தன் இயக்கியுள்ளார். ரித்திகா சிங், சந்தீப் கோயத், மனிஷ் ஜான்ஜோலியா, ஞானப்பிரகாஷ் நடித்துள்ளனர். இந்தியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து, வரும் 3ம் தேதி திரையிடப்படுகிறது. மிதுன் கங்கோபாத்யாய் ஒளிப்பதிவு செய்ய, தமிழில் ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா வெளியிடுகிறார். படம் குறித்து ஹர்ஷ்வர்தன் கூறுகையில், ‘உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் அடிப்படையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் மீதான வன்முறை தினந்தோறும் நடக்கிறது.வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சிலர் இதுபோன்ற துன்பமான நிகழ்வுகளைச் சந்திக்கின்றனர். இது ஏன் நடக்கிறது? கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண், என்னென்ன சித்ரவதைக்கு ஆளாகிறாள் என்பதே இப்படத்தின் கதையாகும்’ என்றார். ரித்திகா சிங் கூறும்போது, ‘இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. நடித்து முடித்த பிறகும் கூட, அந்தக் கேரக்டருக்குள் இருந்து என்னால் வெளியே வர முடியவில்லை. கடத்தப்பட்ட பெண்ணின் மனச்சிதைவு குறித்தும், துன்பத்தின் எந்த எல்லைவரைக்கும் அப்பெண் செல்கிறாள் என்றும் இந்தப் படம் சொல்லி இருக்கிறது’ என்றார்.