நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் கல்லூரி களப்பயணத்தில் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுரை :
திருவள்ளூர் மாவட்டத்தில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கரிடையே உயர்கல்வி தொடர்வதற்கான உற்சாகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பட்டரைபெரும்புதூர், டாக்டர்.அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி களப்பயணத்தில் மாணவ, மாணவியர்களோடு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி பேசினார்.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவியர்களில் தற்போது 35 விழுக்காடு மாணவ – மாணவியர்கள் மட்டுமே உயர் கல்வியை தொடர்கின்றனர். இந்நிலையை மாற்றுவதற்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இவ்வாண்டு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ – மாணவியர்களுக்கு கல்வி களப்பயணம் செயல்பாடு திட்டமிடப்பட்டுள்ளது.இக்கல்லூரியில் களப்பயணம் மட்டுமல்லாது மாவட்டத்தின் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவ – மாணவியர்கள் அருகாமையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளான திருத்தணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரி, பொன்னேரி எல்.அன்.ஜி கலைக்கல்லூரி, திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி, பட்டாபிராம் டி.ஆர்.பி.சி.சி இந்து கல்லூரி, பொன்னேரி உணவு மற்றும் பால்வளக் கல்லூரி, அலமாதி மீன்வளக் கல்லூரி, இருங்காட்டுக்கோட்டை காலனி வடிவமைப்பு கல்லூரி ஆகிய இடங்களுக்கு 1050 மாணவ, மாணவியர்கள் களப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். கல்லூரி களப்பயணத்தின் போது கல்லூரி பேராசிரியர்களும் மாணவ-மாணவியர்களும் குறிப்பாக நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் பள்ளி மாணவ-மாணவியர்களை வரவேற்று கல்லூரி வளாகத்தில் உள்ள பல்வேறு துறைகள், நூலக வசதிகள் விளையாட்டு வாய்ப்புகள் ஆய்வு அறைகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளனர் என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கரிடையே உயர்கல்வி தொடர்வதற்கான உற்சாகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ- மாணவியர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.இராமன், கல்லூரி முதல்வர் கயல்விழி, பள்ளிக்கல்வித்துறை உதவி திட்ட அலுவலர் பாலமுருகன், மாணவ – மாணவியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.