தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் 17.02.2023 முதல் 23.02.2023 வரை கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நடைபேரணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.
நம் திருவள்ளூர் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டில் காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களில் சளி பரிசோதனை, மார்பு X-RAY, CBNAAT, TRUNAAT மற்றும் FNAC ஆகிய பரிசோதனைகளின் மூலம் 2,123 புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். இதில் 1,927 பேர் அரசாங்கத்தாலும், 196 பேர் தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களாலும் தெரியப்படுத்தப்பட்டுள்ளனர். நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளித்த முதல் மூன்று மாதங்களில் 96 சதவீதம் தொற்று நீக்கமும் ஆறு மாத சிகிச்சை முடிவில் 97 சதவீதம் அதாவது 2,059 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். நம் திருவள்ளுர் மாவட்டத்தில் காசநோயின் இறப்பு விகிதம் 3 சதவீதமாக உள்ளது. பன்மருத்து எதிர்ப்பு காசநோய் MDR-TB 101 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.“காசநோய் இல்லாத இந்தியா மற்றும் தமிழகம் 2025″ என்ற இலக்கினை நோக்கி நம் மாவட்டம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மொத்தம் 4,329 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, அதில் 49 நபர்களுக்கு காசநோய் என கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் 17.02.2023 முதல் 23.02.2023 வரை கடைப்பிடிக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் கூறினார்.இந்த பேரணியில் காசநோய் சுகாதாரத்துறை துணை இயக்குநர் லட்சுமி முரளி, தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், கல்லூரி மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.