அம்மன் திருக்கோவில் கொடைவிழா தை மாதம் முதல் செவ்வாய் தொடங்கியது.
தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் வீற்றிருக்கும் பிரசித்தி பெற்ற அருள்தரும் அம்பிகை ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் கொடைவிழா தை மாதம் முதல் செவ்வாய் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாசி மாதம் இரண்டாம் செவ்வாய் 6 வது மண்டகப்படி வடகரை வன்னிய குல சத்திரியர் சமுதாயத்தினரால் சிறப்பாக நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு அருள்மிகு உண்மை விநாயகர் திருக்கோவிலிலிருந்து பால்குடம், குற்றாலத் தீர்த்தக்குட அழைப்பு நடைபெற்று மதியம் முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அனுமா நதியிலிருந்து தீர்த்தக்கரகத்தை கோவில் அர்ச்சகர் சொ.முப்புடாதி பிள்ளை சுமந்து வர மண்டகப்படிதாரர்களான வன்னியர் சமூகத்தினர் மேள தாளங்கள் முழங்க அக்னிசட்டி, முளைப்பாரி சுமந்து ரத வீதிகளில் உலா வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது. இரவு முப்புடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீர்த்தக்கரக அபிஷேகமும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் முப்புடாதி அம்மனை மண்டகப்படிதாரர்களும் ஏராளமான பக்தர்களும் தரிசனம் செய்தனர். நள்ளிரவு நெல்லை டவுண் மாரியப்பராஜா குழுவினர் மற்றும் வடகரை பரமசிவன் குழுவினர் நைய்யாண்டி மேளம் மற்றும் ரமேஷ் குழுவினரின் கரகாட்டத்துடன் பூரதத்தில் முப்புடாதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வன்னியர் சமுதாய நிர்வாகிகளான கணேசன், நயினார், வேம்புராஜ் ஆகியோர் செய்திருந்தனர். அச்சன்புதூர் காவல்நிலைய காவல் அதிகாரிகளும் அனைத்து நிலைக் காவலர்களும் பாதுகாப்பு பணியை சிறப்பாக செய்திருந்தனர்.