ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.5.62 இலட்சம் மதிப்பீட்டிலான கையடக்க கணினிகள்
![]()
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 92 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 53 மனுக்களும், வேலைவாய்ப்;பு தொடர்பாக 30 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 60 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 96 மனுக்களும் என மொத்தம் 331 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம், கிவ் இந்தியா மற்றும் அமீசான் ஆகிய தொண்டு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் கிராமப்புற ஏழை-எளிய மாணவ, மாணவியர்கள் இணையதளம் மூலம் கல்வி தொடர்பான தகவல்களை எளிய முறையில் பெற்று பயனடைவதற்கு ஏதுவாக அரசு பள்ளிகளில் பயிலும் 25 மாணவ, மாணவியர்கள் மற்றும் 20 கல்வி தன்னார்வலர்கள் என மொத்தம் 45 பயனாளிகளுக்கு தலா ரூ.12,500 வீதம் ரூ.5.62 இலட்சம் மதிப்பீட்டிலான கையடக்க கணினிகளை மாவட்ட ஆட்சியர் இலவசமாக வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், அரசு பள்ளிகளில் பயிலும் பார்வைத்திறன் குறைபாடுடைய 5 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.10,185ஃ- வீதம் ரூ.50,925 மதிப்பீட்டிலான எழுத்துகளை பெரிதாக்கி காட்டும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் இலவசமாக வழங்கினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், தனித்துணை ஆட்சியர் சி.ப.மதுசூதணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கா.காயத்திரி சுப்பிரமணி (பொது), திருவள்ளூர் பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.வெங்கடேசலு, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநர் பி.ஸ்டீபன், முடநீக்கு வல்லுநர் ஆஷா, சைகை மொழி பெயர்ப்பாளர் சசிகலா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

