சாலையோரம் நிறுத்தப்படும் தனியார் தொழிற்சாலை வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் :
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் அருகே மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் பிரபல தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஜே.சி.பி உள்ளிட்ட கனரக வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் மற்றும் தொழிலாளர்கள் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் சாலை விரிவுபடுத்தியதற்கு முன்பு இருந்ததை விட இந்த பகுதியில் தற்போது, சாலைகள் குறுகலாகி விட்டது.குறிப்பாக அந்த தொழிற்சாலையின் முன்பாக சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.இது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனையடுத்து புரட்சி மக்கள் நலசங்கம் சார்பாக சங்கத் தலைவர் அரவிந்தன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி உடனடியாக சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர்.பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.