மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து :
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பேசினார்.2022-2023 ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 5 பிரிவினருக்கு மொத்த பரிசுத் தொகை ரூ.28.50 கோடி உட்பட ரூ.56.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் பள்ளி கல்லூரி, பொதுப்பிரிவினர், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு நடத்தப்படுகிறது. இம்முறை புதியதாக கிரிக்கெட் போட்டிகள், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் இணைக்கப்பட்டு, சிறந்த முறையில் நடத்தப்படவுள்ளது.தனிநபர் போட்டிளில் மாநில அளவில் வெல்பவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் குழுவினரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு முதல் பரிசாக ரூ.6 இலட்சம் முதல் ரூ.9 இலட்சம் வரை வழங்கப்படவுள்ளது.தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 36 வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆகியோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.இந்த வருடம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் இருந்து மொத்தம் 22,231 நபர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இராமன், திருவள்ளூர் உதவி காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா,மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.