சென்னை மெரினா கடலில் கருணாநிதி பேனா நினைவு சின்னம்
கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டம் குறித்து தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, ராம்குமார் ஆதித்யன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘பேனா நினைவுச் சின்னக் கட்டுமானத்திற்கு தடை விதிக்க வேண்டும். பேனா நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கான கடற்கரை ஒழுங்கு மண்டல விண்ணப்பத்தை பரிசீலிக்க ஒன்றிய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும்.மேலும், மெரினாவிலும், கொட்டிவாக்கம், கோவளம் உள்ளிட்ட கடற்கரையிலும் யாருக்கும் நினைவிடங்கள் அமைக்க தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிடப்பட்டது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், “இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.இதையடுத்து, பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல அமர்வின் நீதித் துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, ‘பத்திரிகைகளில் நான் படித்தது உண்மை என்றால் அது கருத்துக் கேட்புக் கூட்டமே இல்லை. எல்லா தரப்பினரையும் அழைத்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டதா?’ என்று கேள்வி எழுப்பினார்.மேலும், இத்திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுகூரும் வகையில், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தின் பின்புறம், வங்கக்கடலில் பேனா வடிவ நினைவுச்சின்னம் ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு முயற்சி எடுத்துள்ளது.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் ஆகியோர் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகள், மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.அந்தக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த சீமான், பேனா நினைவுச்சின்னம் அமைத்தால் உடைப்பேன் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.