அருள்மிகு நகரீஸ்வரமுடையார் திருக்கோவிலில் வைத்து பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசாமி திருக்கோவில் தைப்பூசத்திருநாள் ஆண்டுதோறும் பண்பொழி அருள்மிகு நகரீஸ்வரமுடையார் திருக்கோவிலில் வைத்து பத்து நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான தைப்பூசத்திருநாள் 26.1.23 வியாழக்கிழமை மாலை அன்னக்கொடி ஏற்றப்பட்டு துவங்க இருக்கிறது.
வியாழனன்று காலை மலைக்கோவிலில் கொடி ஏற்றப்பட்டு சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மாலை ஐந்து மணி அளவில் பண்பொழி ஐந்துபுள்ளி மண்டபத்திலிருந்து வெள்ளிமயில் வாகனத்தில் அழைத்து வரப்பட்டு மாலை 6.30 மணிக்கு கீழ ரதவீதியில் அன்னக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெறும்.பின்னர் திருமலைக்க்குமாரசாமிக்கு வெள்ளிமயிலில் தீப ஆராதனை நடைபெறும்.இத்திருக்கோவிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் தந்தப்பல்லக்கு, கலைமான் வாகனம், கோரதம், சிம்மவாகனம், வெள்ளிச்சப்பரம், ஆட்டுக்கிடாவாகனம், சட்டத்தேர், வெள்ளிமயில், யானைவாகனம், கைலாசபர்வதம், புஷ்ப பல்லக்கு போன்றவற்றில் திருமலைக்குமாரசாமி திருவீதி உலாக்கள் நடைபெறும். ஏழாம் திருநாளில் திருமலையிலிருந்து சண்முகர் அழைப்பும் திருமலைக்குமாரசாமி, சண்முகர் எதிர்சேவைக் காட்சியும் சண்முகர் அர்ச்சனையும் இரவு இரட்டைச் சப்பரத்தில் திருமலைக்குமாரசாமி திருமலை சண்முகர் வீதி உலாவும் நடைபெறும். எட்டாம் திருநாளான்று சண்முகர் வெள்ளைசாத்தி, பச்சைசாத்தி பக்தர்களுக்கு காட்சியளித்த பின்னர் பண்பொழியிலிருந்து மலைக்கோவிலுக்கு எழுந்தருளுவார். ஒன்பதாம் திருநாளான்று காலை திருத்தேரில் திருமலைக்குமாரசாமி எழுந்தருளி வீதி உலா நடைபெறும். பத்தாம் திருநாளில் வெள்ளிமயில் வாகனத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். திருமலைக்குமாரசாமிக்கு மதியம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் மாலையில் பக்தி உலா நிகழ்ச்சியும் மண்டகப்படிதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்களால் நடத்தப்படும். சிறப்பு இசை நிகழ்ச்சிகள், நாதஸ்வர கச்சேரி, கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம் போன்றவையும் மண்டகப்படிதாரர்களால் நடத்தப்படுகிறது. பதினொன்றாம் திருநாளன்று காலை திருமலைக்குமாரசாமி பக்தர்களிடம் பிரியாவிடை பெற்று திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்வுடன் தைப்பூசத்திருநாள் நிகழ்ச்சிகள் நிறைவுபெறும். தைப்பூசத்திருவிழா ஏற்பாடுகளை திருமலைக்குமாரசாமி திருக்கோவில் தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.