தி.மு.க. ஆட்சி தமிழுக்கான ஆட்சி: அனைத்து மாவட்டங்களிலும் இலக்கிய திருவிழா.

Loading

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கிய தின விழா-2023 நேற்று நடைப்பெற்றது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த இலக்கிய படைப்புகளையும் அவர் பார்வையிட்டார். இதில் இரு நூற்றாண்டு காலமாக பயன்படுத்தப்பட்ட தமிழர் பண்பாட்டு நாணயங்கள், அச்சு பயன்பாடு எந்த அளவில் இருந்தது என்பதை விளக்கும் வகையிலான படைப்புகள் ஏராளமாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது. இவை அனைத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்ட போது அதிகாரிகள் முழுமையாக விளக்கி கூறினார்கள். அதன் பிறகு விழா தொடங்கியதும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-தி.மு.க.-வின் ஆட்சிக் காலம் என்பது எப்போதும் தமிழாட்சி காலம் தான். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தின் ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடந்து வருகிறது. தி.மு.க. ஆட்சியை தமிழாட்சி என்று நாமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு முன்னெடுப்புகளை முத்தமிழ் வளர்ச்சிக்காகச் நம்முடைய ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.ஏராளமான தமிழ்க் காப்புத் திட்டங்களை இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல இலக்கியத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகைய விழாவில் 100 நூல்களை நான் உங்களின் அன்போடு, ஆதரவோடு இங்கே வெளியிட்டு இருக்கிறேன். ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்காக ஒரு விழா என்று இல்லாமல்-100 புத்தகங்களை வெளியிடும் ஒரு விழாவாக இந்த விழா மிகமிக பிரமாண்டமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அனைத்துமே மிகப் பெரிய பதிப்பகங்களுடன் போட்டி போடக் கூடிய வகையில் அறிவுக் கருவூலங்களை வெளியிட்டு இருக்கின்றன. அதிலும் கடந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான புதிய புதிய புத்தகங்களை நான் பார்க்கிறேன்.இவை அனைத்தும் தமிழின் பெருமையை, தமிழின் செழுமையை, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றை, சமூக வரலாற்றை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழ்நாட்டை இன்றைய தலைமுறைக்கு கற்பிக்கும் புத்தகங்களாக அமைந்துள்ளன. மொழியைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த இனம்தான் நம்முடைய தமிழ் இனம். திராவிட இயக்கம் அரசியல் இயக்கமாக இருந்தாலும் மொழி காப்பு இயக்கமாகவே தொடக்கம் முதல் இயங்கி வருகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த அரசியல் கட்சியும், இலக்கிய இயக்கமாக இருந்ததில்லை. தி.மு.க. தான் அப்படி வளர்ந்தது. தன்னை வார்ப்பித்துக் கொண்டது.மொழியைப் பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது. அறிவால், உணர்வால் வளர்த்தாக வேண்டும். அதற்காகத்தான் இத்தகைய இலக்கிய விழாக்களை நாம் நடத்துகிறோம். இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வை ஊட்டியாக வேண்டும். தமிழ் இலக்கிய உணர்வை ஊட்டியாக வேண்டும். இலக்கியம் தான் ஒரு மனிதனை பண்படுத்தும்.
* யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரி, மனித சமுதாயத்துக்குள் இருக்கும் அத்தனை வேறுபாடுகளையும் துடைத்தெறியும்.* வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வரி கல்நெஞ்சத்தையும் கரைக்கும்!
* தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தம் மெய் வருத்தக் கூலி தரும்-என்பதை விட தன்னம் பிக்கை வரி உலகத்தில் உண்டா? இத்தகைய படைப்புகள் தமிழர்களால் அதிகம் படிக்கப்பட வேண்டும். அதற்கு இளமைக்காலத்தில் இருந்தே மாணவ சமுதாயத்துக்கு தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத ஆர்வத்தை உருவாக்க வேண்டும். படைப்பரங்கம், பண்பாட்டரங்கம், பயிலரங்கம், குழந்தைகள் இலக்கிய அரங்கம், நிகழ்த்துக் கலைகள் என மிக விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இது போன்ற திருவிழாக்கள் இலக்கிய ஆர்வத்தை உருவாக்க உறுதுணையாக அமையும். வரலாற்றை படித்தவர்களால் தான் வரலாற்றைப் படைக்க முடியும். இலக்கியம் படித்தால் தான் நாம் வாழும் சமுதாயத்தை உணர முடியும். இலக்கியம் என்பது பொழுது போக்கு அல்ல, அதுதான் நமது நோக்கும் போக்குமாக மாற வேண்டும். இலக்கியம் என்பது பேரியக்கமாக மாற வேண்டும். புத்தகக் கண்காட்சிகள் மாவட்டந்தோறும் பரவி நடப்பதைப் போல இலக்கிய விழாக்களும் மாவட்டந்தோறும் பரவி நடைபெற வேண்டும். இது கூடி கலையும் கூட்டம் அல்ல, கூடிப்படைக்கும் கூட்டம் என்பதை நிரூபிக்கும் வகையில் இலக்கிய விழாவை சிறப்பிக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *