கவர்னர் உரையில் இடம்பெற உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் முதல்வர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
சட்டப்பேரவையில் கவர்னர் நிகழ்த்தும் உரையில் இடம் பெறும் அரசின் கருத்துகள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.
சட்டப்பேரவை கூட்டம் வருகிற 9-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை யின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. 3 நாட்கள் வரை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு க்கான தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விசாரணை ஆணைய அறிக்கை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிமன்ற ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை ஆகியவை சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது.இந்த பரபரப்பான சூழ்நிலையில், 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் வருகிற 9ம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த வாரம் அறிவித்தார்.
இந்த கூட்டத்தொடர் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிகிறது. வருகிற 9ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அமைச்சரவை கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், வருகிற 9ம் தேதி கூடுகிற சட்டப்பேரவை கூட்டம் 2023-ம் ஆண்டின் முதல் பேரவை கூட்டம் ஆகும். அதனால் அன்றைய தினம் காலை 10 மணிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார்.அதன்படி, கவர்னர் உரையில் தமிழக அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய மசோதாக்கள் நிறைவேற்றுவது குறித்து ஆ லோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் கவர்னர் உரையில் இடம்பெற உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.