மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
![]()
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 82 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 16 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 57 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 67 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 42 மனுக்களும்; என மொத்தம் 264 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 18 வயதிற்கு மேற்பட்ட காது கேளாத மற்றும் பார்வையற்ற பட்டப்படிப்பு பயிலும் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,549 வீதம் ரூ.1,35,490 மதிப்பீட்டிலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களையும், கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,840 வீதம் ரூ.68,400 மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், ஆரம்பநிலை பயிற்சி மையத்தில் பயிலும் காது கேளாத 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தலா ரூ.5,560 வீதம் ரூ.11,120 மதிப்பீட்டிலான காதொலி கருவிகளையும் என மொத்தம் ரூ.2,15,010 மதிப்பீட்டிலான பல்வேறு உதவி உபகரணங்களை இலவசமாக மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.மேலும் இச்சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் தேர்வு செய்யப்பட்ட 20 மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்கள் சுய தொழில் செய்து வருவாய் ஈட்டிக்கொள்வதற்கேதுவாக ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பாக தலா ரூ.5,000 வீதம் ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையை நிதியுதவியாக அம்மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், தனித்துணை ஆட்சியர் சி.ப.மதுசூதணன், உதவி ஆணையர் (கலால்) கா.பரமேஷ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநர் பி.ஸ்டீபன், வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு தலைவர் லிவிங்ஸ்டன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

