கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபால் விளையாட்டு வீரர் நேபாளம் நாட்டில் உயிரிழந்த பரிதாபம்
திருவள்ளூர் டிச 27 : திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நேருதாசன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஆகாஷ் (27) இளைய மகன் ஆதவன்(24).வாலிபால் விளையாட்டு வீரரான ஆகாஷ் பி.இ பட்டதாரி. இவர் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். தனியார் பள்ளி ஒன்றில் விளையாட்டு ஆசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கோவையில் உள்ள யூத் ஸ்போர்ட்ஸ் ப்ரமோஷன் அசோசியேசன் என்ற அமைப்பு மூலம் கடந்த 21-ம் தேதி நேபாளம் நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் ரங்கசாலவிளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற வாலிபால் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.இந்நிலையில் நேற்று (25.12.2022) காலை 11.00 மணியளவில் நேபாளம் நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டில் முதல் சுற்றில் வெற்றி பெற்று ஓய்வு எடுக்க சென்றுள்ளார்.பின்னர் ஓய்வு அறையில் ரத்த வாந்தி எடுத்து மயக்கம் அடைந்த ஆகாஷை சக விளையாட்டு வீரர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.இதனை அடுத்து ஆகாஷின் பெற்றோருக்கு பயிற்சியாளர் நாகராஜன் தகவல் கொடுத்துள்ளார். தகவல்அறிந்பெற்றோரஅதிர்ச்சியடைந்தசெய்வதறியாத தவித்தனர். மேலும் நேபாளம் நாட்டில் உயிரிழந்த மகனின் உடலை கொண்டு வருவதில் சிரமம் இருப்பதால் ஆகாஷின் உறவினர்கள் மற்றும் கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் இளைஞர்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக மனு ஒன்றை அளித்தனர்.அதில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த ஆகாஷின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் அவரின் பிரேதத்தை உரிய முறையில் விசாரணை செய்து பிரேத்தை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.