சினிமா விழாக்களுக்கு செல்லாதது ஏன் – மனம் திறந்த நயன்தாரா
நயன்தாரா நடித்து நேற்று வெளியான படம், ‘கனெக்ட்’. அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இதில் அனுபம் கெர், சத்யராஜ், வினய் உட்பட பலர் நடித்துள்ளனர். ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து தயாரித்துள்ளனர்.இதன் புரமோஷனுக்காக நயன்தாரா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: திரைத்துறைக்கு வந்து 20 வருடம் ஆகிவிட்டது. சினிமா வரலாற்றில் என் பெயரும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதைக் கடவுள் கொடுத்திருக்கிறார். முதல் 10 வருடங்களுக்குப் பிறகு, எனக்கு சில கனவுகள் இருந்தது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடிக்க நினைத்தேன். அப்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்காது. பாடல் விழா நடந்தாலும் எங்கோ ஓரமாக நிற்க வைக்கும் நிலைமைதான் இருந்தது. அதனால்தான், விழாக்களுக்குச் செல்லாமல் தவிர்த்தேன். பிறகு அதை தொடரவே இல்லை.சினிமாவில் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகள் உருவாக வேண்டும் என்றும் அப்போது நினைத்தேன். இப்போது அப்படிப்பட்ட படங்கள் அதிகமாக வருகிறது. அதைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன் வருகிறார்கள். இது எனக்கு பெருமையாக இருக்கிறது.
இவ்வாறு நயன்தாரா தெரிவித்துள்ளார். விஜய்யின் ‘சிவகாசி’ படத்திலும் ரஜினியின் ‘சிவாஜி’ படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடியதுபற்றி கேட்டபோது, “ஏன் ஒரு பாடலுக்கு ஆடுகிறீர்கள் என்று அப்போது கேட்டார்கள். அந்தப் பாடலில் ஏதோ இருப்பதால்தானே என்னை அழைக்கிறார்கள். அதனால்தான் ஆடினேன். அந்தப் பாடல்கள் வெற்றி பெற்றன” என்றார்.