திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் ஊராட்சியில் குப்பை கழிவுகளை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு

Loading

திருவள்ளூர் டிச 18 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட  வெங்கத்தூர் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.   இந்நிலையில் இங்கு தினசரி சேகரமாகும் 5 முதல் 10 டன் குப்பையை வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் உள்ள நீர் நிலையான கூவம் ஆற்றில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக  கொட்டி வருகின்றனர். நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம், திருமண மண்டபங்கள்,  ஹோட்டல்கள் என அனைத்தும் அதிகரித்து வருவதால் கழிவுப் பொருட்களும் அதிகளவில் சேர்வதால் கூவம் ஏரி முற்றிலும் மறைந்து குப்பைக் கிடங்காக மாறியுள்ளது.தினந்தோறும் 5 டன்  குப்பைகள் கொட்டப்படுவதால்  அப்பகுதியில் குப்பைகள் மலைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதியை  சேர்ந்த பொதுமக்களுக்கு  தோல் நோய் உட்பட பல வகையான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந் நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு  திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கன்னிமாக நகரில்  பள்ளி, அங்கன்வாடி மற்றும் குடியிருப்பு அருகில் குப்பைகள் கொட்டப்பட்டது. இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.கூவம் ஆற்றில் கொட்டுவதால் அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக  கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இதனையடுத்து நீர் நிலைகளில் குப்பைகளை கொட்ட கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனைத் தொடர்ந்து கணேசபுரம் பகுதியில் குப்பைகளை கொட்ட அனுமதி மறுக்கப்பட்டது.இதனால் வெங்கத்தூர் ஊராட்சியில் சேரும் குப்பைக்கழிவுகளை மீண்டும் கன்னிமாநகர் பகுதியில் கொட்டுவதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  இதனால் கன்னிமா நகரில் கடந்த சில நாட்களாக கொட்டி வருகின்றனர்.  இங்கு கொட்டக் கூடாது என்று கிராம மக்கள் எச்சரித்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இரண்டாவது முறையாக 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில்  குப்பைகளை ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் கன்னிமாநகர் பகுதியில் கொட்ட வந்தனர்.இதனையடுத்து கன்னிமா நகர் பகுதி மக்கள் வெங்கத்தூர் ஊராட்சி எல்லையில் ஒன்று திரண்டு, டிராக்டரில் கொண்டு வந்த குப்பைக் கழி்வுகளை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி, ஒன்றிய கவுன்சிலர் நா.வெங்கடேசன் மற்றும் பா.ம.க மாநில நிர்வாகி  பாலா (எ) பாலயோகி ஆகியோர் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.  அதனைத் தொடர்ந்து வெங்கத்தூர் வருவாய் ஆய்வாளர் விஷ்ணு பிரியா, கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி மற்றும் மணவாளநகர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை   நடத்தினர் .அப்போது, தாங்கல் வசிக்கும் கன்னிமாநகர் பகுதியில் இந்த குப்பைக் கழிவுகளை கொட்டுவதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாகவும், இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் தெரிவித்தனர்.  மேலும், இங்கு குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அ.சந்தானம் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்.  ஆனால் பொது மக்கள் கன்னிமா நகர் பகுதியில் குப்பைக் கழிவுகளை கொட்ட தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால்  தற்காலிகமாக வெங்கத்தூர் ஊராட்சியில் சேரும் குப்பைக் கழிவுகளை சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கிடங்கில் ஒப்படைக்க உள்ளோம்.  அதற்கு பிறகு வருகிற 22-ந் தேதி கிராம மக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் அ.சந்தானம் தெரிவித்தார்.மேலும் வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளேரித் தாங்கல் அருகில் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் மற்றும் இயந்திரம் ஆகியவை தயார் நிலையில் இருக்கிறது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று அங்கு அதற்கான பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் அ.சந்தானம் தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *