என் மீது ஆசிட் வீசுவார்களோ என்ற பயம் எப்போதும் இருக்கும் என் மீது ஆசிட் வீசுவார்களோ என்ற பயம் எப்போதும் இருக்கும்
டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி மீது ஆசிட் வீசியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைள் எழுந்துவரும்நிலையில் பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் தனது சகோதரிக்கும் இதுபோல் ஆசிட் தாக்குதல் நடந்ததை நினைவுகூர்ந்து, அப்போது அவர்கள் அனுபவித்த வேதனைகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சாலையோர ரோமியோ ஒருவரால் எனது டீனேஜ் பருவத்தில் என் சகோதரி ரங்கோலி ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானாள். அந்தக் கொடூர தாக்குதலில் இருந்து மீண்டு வர என் சகோதரிக்கு 52 அறுவை சிகிச்சைகளைச் செய்ய வேண்டியிருந்தது. சொல்ல முடியாத, நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அந்த தருணத்தில் என் சகோதரி உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டாள்.
எனது குடும்பமும் சொல்ல முடியாத வேதனைக்குள்ளானது.
அந்தச் சம்பவத்துக்குப் பின் என்னை கடந்து செல்வபவர்கள் யாரேனும் என் மீது ஆசிட் வீசுவார்களோ என்ற பயம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அந்த பயத்தினால் பல முறை எனது முகத்தை மூடிகொள்வேன். முகம் தெரியாத நபர்கள் என்னைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் எனக்குள் பயம் இருந்துகொண்டே இருந்தது. அந்த தருணங்களில் என்னை அறியாமல் எனது முகத்தை மூடிக்கொண்டுள்ளேன்.
அப்படிப்பட்ட ஆசிட் கொடுமைகள் இன்னும் நிற்காமல், தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றன. இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக அரசு மிகக்கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று கங்கனா தெரிவித்துள்ளார்.