*காணாமல் போன முன்னாள் போலீஸ்காரர் கொலை மகன் உள்பட இருவர் கோர்ட்டில் சரண்டர்
ஊத்தங்கரை அருகே மாயமான முன்னாள் போலீஸ்காரரை கொன்றதாக அவரது மகன் உள்பட இருவர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரணடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவியை சேர்ந்தவர் செந்தில்குமார், 48; முன்னாள் போலீஸ்காரர். இவரது மனைவி சித்ரா, 38. சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ., யாக பணிபுரிகிறார். இவரது மகன் ஜெகதீஷ் குமார், 19. செந்தில்குமார் கடந்த,1997ல், போலீசில் சேர்ந்தார். கடந்த, 2009ல், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முரளி என்பவர் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் அவரது ஜீப்பை தொப்பூர் காட்டில் உள்ள கணவாயில் உருட்டி விட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதற்கு முன்னர் ஆயுதப்படை போலீஸ் வாகனத்தை பாரூர் ஏரியில் தள்ளிவிட்டதாகவும் அவர் மீது புகார் இருந்தது. அதன் பின்னரும் தொடர்ந்து அவர் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால், கடந்த, 2012ல் அவர் போலீஸ் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.ஊத்தங்கரை கவர்னர்தோப்பு பகுதியில் வசித்த இவர், கடந்த செப்.,ல், மாயமானார். இது குறித்து செந்தில்குமாரின் தாய் பாக்கியம், 65, கல்லாவி போலீசிலும், கடந்த அக்.,31ல், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.
இதுகுறித்த போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த செப்.,16ல், மாயமான செந்தில்குமார் மற்றும் அவரது மகன் ஜெகதீஷ்குமார், மற்றொருவரின் மொபைல் சிக்னல் ஒரே இடத்தை காட்டி, பின்னர் அனைத்தும் ஒரே நேரத்தில் சுவிட்ச் ஆப் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெகதீஷ்குமாருடன் இருந்த மற்றொரு மொபைல் எண்ணை வைத்து விசாரிக்கையில், அவர் ஊத்தங்கரை அடுத்த பாவக்கல்லை சேர்ந்த கமல்ராஜ், 37, என்பது தெரிந்தது. அவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.இந்நிலையில், நேற்றுமுன்தினம் அவர்கள் இருவரையும் ஊத்தங்கரை போலீசார் விசாரித்துள்ளனர். அதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மீண்டும் ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு போலீசார் கூறி அனுப்பினர். போலீஸ் விசாரணைக்கு பயந்த அவர்கள் கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சவா முன்பு ஆஜராகி கடந்த செப்.,16ல், செந்தில்குமாரை கொன்று, பாவக்கல் தென்பெண்ணையாற்றில் வீசியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.செந்தில்குமார் கொலை குறித்து அவரது மனைவியும், எஸ்.எஸ்.ஐ.,யுமான சித்ராவிடம் ஊத்தங்கரை டி.எஸ்.பி., அமலா அட்வின் விசாரித்து வருகிறார்.