திருவள்ளூர் டிச 12 : திருவள்ளூர் மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். அதே நேரத்தில் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகவும் உள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், புழல் ஏரி, சோழவரம் ஏரி செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் கண்ணன் கண்டிகை என சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் 5 ஏரிகள் உள்ளன. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது போளிவாக்கம் ஊராட்சி. இங்கு பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் பெரிய ஏரி மற்றும் சித்தேரி என 2 ஏரிகள் உள்ளது. இதில் திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது சித்தேரி. இந்த ஏரி தண்ணீரை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு பருவமழையின் போதும் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பிவிடுகின்றன. அதே போல் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட போளிவாக்கத்தில் திருவள்ளூர் – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சித்தேரியும் நிரம்பி விடுகிறது. திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு மற்றும் அழிஞ்சிவாக்கம் ஓடைகளில் அதிகளவில் மழை பெய்யும் போது நீர் நிரம்பி அதன் உபரி நீர் திறக்கப்படுவதால் அந்த நீரின் மூலம் போளிவாக்கம் பெரிய ஏரியும் சித்தேரியும் அதன் முழு கொள்ளைளவை எட்டிவிடுகிறது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக நேற்று பெய்த கன மழையால் போளி வாக்கத்தில் உள்ள சித்தேரி நிரம்பி உபரி நீர் வெளியேறிய நிலையில் போளிவாக்கம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் திருவள்ளூர் – ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் தொழிற்சாலை வாகனங்கள், தனியார், அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் போன்ற இதர வாகனங்களும் இரு புறமும் மெதுவாக இயக்கப்படுகின்றன. இதனால் போளிவாக்கம் தரை பாலத்தை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை நீடிக்கும் பட்சத்தில் தரைப்பாலத்தில் நீர் அதிகமாகி போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.