பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக இரு தரப்பு மீனவர்களிடையே 9 மணி நேர பேச்சுவார்த்தை
திருவள்ளூர் டிச 09 : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக கூனங்குப்பம் மீனவர்களுக்கும், ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம் ஆகிய 3 மீனவ கிராமத்தினருக்கும் பிரச்சினை இருந்து வருகிறது.கடலில் மீன் பிடிக்கும் கூனங்குப்பம் மீனவர்கள், பாரம்பரியமாக பழவேற்காடு ஏரியில் நண்டு வலை விடுவதாகவும் அதற்கு ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 1000-க்கும் மேற்பட்டோர் கிராமத்தை காலி செய்து ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாகவும், வரும் 17-ஆம் தேதி திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பு மீனவர்களையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில், ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம் உள்ளிட்ட 12 மீனவ கிராம மக்கள் போராட்டம் நடத்தப்படும் என அவர்களுக்குள் பேசி முடிவெடுத்ததால் வட்டாட்சியர் செல்வகுமார் நேரடியாக சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும், ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று முற்பகல் 11 மணியளவில்ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம் உள்ளிட்ட 12 மீனவ கிராம மக்களுடன் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பழவேற்காடு ஏரியில் கூனங்குப்பம் மீனவர்கள் நண்டு வலை விடக்கூடாது எனவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் 12 மீனவ கிராமத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். மீன்பிடிப்பது தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
பின்னர் மற்றொரு தரப்பான கூனங்குப்பம் மீனவர்களுடன் மாலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது அவர்களுக்கு ஆதரவாக தமிழக-ஆந்திர மீனவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களையும் பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டும் என காவல் துறையினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கூனங்குப்பம் மீனவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அப்போது பழவேற்காடு ஏரியில் பாரம்பரியமாக நண்டு வலை விரிப்பது குறித்தும் கூனங்குப்பம் மீனவர்கள் தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும், அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், வரும் திங்கட்கிழமைக்குள் சுமூகமான தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து இரு தரப்பு மீனவர்களும் கலைந்து சென்றனர்.